தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் திலீபனின் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!” என்ற கோஷத்துடன் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து வீரச்சாவடைந்த தியாக தீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று தமிழர் தாயகத்திலும், தமிழர்கள் புலம்பெயர் வாழும் தேசம் எங்கும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது.
பிரதான நிகழ்வு யாழ். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் நடைபெற்றது.
தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரமான முற்பகல் 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வு ஆரம்பமானது.
மாவீரர் ஒருவரின் தாயாரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதன் பின்னர் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தியாகி திலீபனின் திருவுருவப்படத்துக்கு முன்னாள் போராளி ஒருவர் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்வில் கலந்துகொண்ட பலரும் உணர்வுபூர்வமாக மலர் அஞ்சலி செலுத்தினார்.
மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாகத் திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைக் கூடங்களிலும் இராணுவப் பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, தியாக தீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அஹிம்சை வழியில் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.