சஜித்துக்கு ஆதரவு தெரிவித்து மேடையேறிய சுமந்திரன் எம்.பி.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேடையேறினார்.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பரப்புரைக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேசத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேடையேறிய சுமந்திரன் எம்.பி., ஜனாதிபதி வேட்பாளர் சஜித்துக்கு ஆதரவு தெரிவித்த்து உரையாற்றினார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்குத் தீர்மானித்திருந்தது.
இதையடுத்து அந்தத் தீர்மானம் தொடர்பாகக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டவர்கள் மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டிருந்தாலும், அந்தத் தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று குறிப்பிட்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாகத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. இன்று (15) யாழ்ப்பாணத்தில் மேடையேறி உரையாற்றினார்.