ஐரோப்பாவில் அடைமழை காரணமாக வெள்ளம்.
ஐரோப்பாவின் மத்திய, கிழக்குப் பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் மேலும் அடைமழை பெய்யக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
செக் குடியரசு, ஜெர்மனி, ருமேனியா போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பலர் வீடுகளைவிட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
செக் குடியரசில் வெள்ளம் குறித்த ஆக உயர்நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் வெள்ளத்தால் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். சுமார் 60,000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ருமேனியாவில் கடும் மழையால் அணைக்கட்டு உடைந்ததில் நால்வர் மாண்டனர்.
ஆயிரக்கணக்கான வீடுகளும் வெள்ளத்தில் சேதமடைந்தன.
அவசரகாலச் சேவைகள் இன்னமும் தங்களை வந்தடையவில்லை என்று குடியிருப்பாளர்கள் கூறினர்.