கேரளாவில் இறந்த நபருக்கு நிபா வைரஸ் உறுதி

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி இளைஞர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.
கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், அருகே உள்ள நடுவத் எனும் பகுதியில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கர்நாடகா மாநிலத்தில் படித்துவந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான நடுவத்திற்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு காய்ச்சல் ஏற்படவே, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருந்ததால், அவரது ரத்த மாதிரிகள், புனேவில் உள்ள தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பட்டது. அங்கு அவரது ரத்த மாதிரியை பரிசோதித்தபோது, அவருக்கு நிபா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த அந்த 23 வயது இளைஞருடன் இருந்த நபர்களை கண்டறிய கேரளா சுகாதாரத்துறை முடிவு செய்தது. அதில், அவருடன் தொடர்பில் இருந்ததாக 151 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்துள்ளது. இவருடன் நெருங்கி பழகியவர்களில் 5 பேரின் ரத்த் மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும், இருவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
தற்போது கேரளாவில் நிபா வைரஸில் இருந்து தற்காத்து கொள்ள தீவிர தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. நிபா வைரஸுக்கு தடுப்பு ஊசிகள் ஏதும் இல்லாததன் காரணமாக அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வரவும், முகக் கவசம் அணியும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.