தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் சமம்! – ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதே சிறந்த வழி என்கின்றார் கஜேந்திரகுமார்.

“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதும், ஒற்றையாட்சியை வலியுறுத்தும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கும் பட்சத்தில், தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கான சகல சதித்திட்டங்களும் முன்னெடுக்கப்படும்.”

இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

எனவே, தமிழ்த் தேசியக் கொள்கைக்கு உண்மையாக இருப்பதற்கான வாய்ப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலமாக மாத்திரமே சாத்தியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இம்முறை ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தும் வகையில் நேற்று திங்கட்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கஜேந்திரகுமார் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இம்முறை ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு பற்றி நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இருப்பினும் இந்த விடயத்தைப் பொறுத்தமட்டில் நான் இங்கு இருந்திருந்தால் எனது நிலைப்பாடு வேறானதாக இருந்திருக்கும் என்று சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு சில கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இருப்பினும் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் கொள்கை ரீதியில் சில விடயங்களை நாம் தெளிவுபடுத்தியிருந்தோம். குறிப்பாக 2009 உடன் தமிழ்த் தேசிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவிட்டதாகவே சிங்கள தேசம் நம்பியது. சிங்கள தேசியவாதத்தின் ஊடாக தமிழ்த் தேசியவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிடலாம் என நம்பப்பட்ட சூழலில், நாம் அதனை நிராகரித்து தமிழ்த் தேசியம் தொடர்பான நிலைப்பாட்டை உறுதியாகக் கடைப்பிடித்து வந்திருக்கின்றோம்.

அந்தவகையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்காமல், அதேநேரம் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி, சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிக்காட்டக்கூடிய ஒரேயொரு தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் மாத்திரமேயாகும். ஏனெனில் இந்தத் தேர்தலின் ஊடாக நாம் அடைந்துகொள்ளப்போவது எதுவுமில்லை. எனவே, இந்தத் தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் ஊடாக சிங்கள தேசியவாதம் உச்சத்தில் இருக்கையில் தமிழ்த் தேசியவாதம் மூலம் வலுவான அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியும்.

அடுத்ததாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினரால் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டிருக்கின்றார். இருப்பினும் தமிழர்களுக்கு சாபக்கேடாக இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை ஆதரித்தவர்களும், ரணில் விக்கிரமசிங்கவே சிறந்த ஆட்சியாளர் எனக் கூறியவர்களுமே தற்போது அந்தப் பொதுக் கட்டமைப்பில் இருக்கின்றார்கள்.

எனவே, அவர்கள் பொது வேட்பாளரைக் களமிறக்குவதன் ஊடாக தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு, ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தத்தை முன்னிலைப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க முயற்சிக்கின்றார்கள். எனவே, தமிழ் மக்கள் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதும், ஒற்றையாட்சியை வலியுறுத்தும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கும் பட்சத்தில், தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கான சகல சதித்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்பதை இப்போதே கூறிவைக்கின்றோம்.

அதேபோன்று இங்கு நாம் பூகோள அரசியல் சூழலையும் கருத்தில்கொள்ள வேண்டும். மேற்குலக நாடுகளும், இந்தியாவும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டுவதையே விரும்புகின்றன. ஆனால், ரணில் விக்கிரமசிங்கவைத் தமிழ் மக்களுக்கு சாதகமானவராகக் காண்பித்து வந்த நிலை மாறியிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அவருக்குத் தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை இந்தியாவும், மேற்குலகமும் புரிந்துகொண்டிருக்கின்றது.

ஆகவே, ஏனைய வேட்பாளர்களுக்கு அளிக்கப்படக்கூடிய வாக்குகளை ரணில் விக்கிரமசிங்கவுக்கு அளிக்கச் செய்வதிலும் அல்லது ரணிலுக்குக் கிடைக்காத வாக்குகள் ஏனைய வேட்பாளர்களுக்கும் கிடைக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதையும் இலக்காகக்கொண்டு சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே இதுவரையில் சமஷ்டி என்ற வார்த்தையை உச்சரிக்காமல் இருந்த தமிழரசுக் கட்சி, இம்முறை தேர்தலில் சமஷ்டியை வலியுறுத்தி சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருக்கின்றது. எனவே, இன்றளவிலே தமிழ்த் தேசியக் கொள்கைக்கு உண்மையாக இருப்பதற்கான வாய்ப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலமாக மாத்திரமே சாத்தியமாகும். ஆகவே, இனிவருங்காலங்களில் தமிழர்களை எவ்வகையிலும் ஏமாற்ற முடியாது என்பதை இந்தத் தேர்தலில் காண்பிக்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.