தமிழின இலட்சியத்துக்காகவே என் வாக்கினையும் அளிப்பேன் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் பரப்புரைக் கூட்டத்தில் மாவை தெரிவிப்பு.

தமிழின விடுதலைக்கான – இலட்சியத்துக்கான பயணத்தில் அணிதிரண்டுள்ள பெருந்தொகையான உங்களைப் போன்று என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் தெரிவிக்கின்றேன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

கிளிநொச்சி பசுமைப் பூங்கவில் நேற்று திங்கட்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து ‘தமிழ்த் தேசிய இனத்தின் எழுச்சியே தமிழ்த் தேசத்தின் மீட்சி’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

“தமிழர்களின் எழுச்சி நிகழ்வான நாளாகவும் தமிழினம் விடுதலை பெறதாத நிலையில் நடைபெறுகின்ற மற்றொரு ஜனாதிபதித் தேர்தலாகவும் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறுகின்ற தேர்தல் அமைகின்றது.

அவ்விதமான தேர்தலில் எமது விடுதலையையும், அதற்கான இலட்சியப் பயணதுக்காகவும் எங்களுடைய வாக்குகளைப் பயன்படுத்துவோம் என்ற உறுதியோடு இந்த எழுச்சி நிகழ்வில் பங்கெடுத்துள்ளீர்கள்.

விடுதலைக்கான போராட்டத்தில் மக்களையும், போராளிகளையும் பலிகொடுத்துள்ளோம். அந்தவகையில் நாம் எமது பயணத்திலே உறுதியாக இருக்கின்றோம், அந்தப் பயணத்தை வலுவானதாக மேற்கொள்ள வேண்டும் என்ற இலட்சியத்துடன் இருக்கும் உங்கள் முன்னிலையில் அந்த இலட்சியத்துக்காக என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் வருகை தந்துள்ளேன்.

அதுமமட்டுமன்றி, நீங்கள் அனைவரும், தமிழர்களின் இட்சியத்துக்கான எழுச்சியை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் 21ஆம் திகதி உங்களுடைய வாக்குகளை அளிக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகின்றேன்.

கடந்த காலத்தில் எமது விடுதலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட உயிர்களை நெஞ்சில் நிறுத்தியவனாக, அதற்காகப் பயணிக்கும் எமது உயிர்களும் எப்போது வேண்டுமானாலும் போகலாம், பணயம் வைக்கப்படலாம் என்பதை நினைவுபடுத்தியவனாக, எதிர்கால எமது இலட்சியத்துக்கான பயணத்தில் அர்ப்பணிப்புச் செய்வதற்குத் தயாராக உள்ள மக்களுக்கும் நன்றி உடையவனாக தேசமாக எழுச்சி அடைவோம். அதற்காக உழைப்போம் என்று உரைத்து விடை பெறுகின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.