டெல்லியின் புதிய முதல்வராக கல்வித்துறை அமைச்சர் அதிஷி தேர்வு!

டெல்லியின் புதிய முதல்வராக கல்வித்துறை அமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை கெஜ்ரிவால் முன்மொழிந்தார்.

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையாலும், பின்னர் சிபிஐயாலும் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 6 மாத சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலையானார். “முதலமைச்சர் அலுவலகத்துக்குச் செல்லக்கூடாது; ஆவணங்களில் கையெழுத்துப் போடக்கூடாது” என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்ததால், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில், நேற்று (செப்.16) அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

மணீஷ் சிசோடியா, கைலாஷ் கெலாட், அதிஷி, துணை சபாநாயகர் ராக்கி பிர்லா மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளின் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்தனர். இதையடுத்து, இன்று மாலை 4 மணி அளவில் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று மாலை கெஜ்ரிவால் ஆளுநரை சந்திக்க உள்ள நிலையில், புதிய முதல்வரைத் தேர்வு செய்ய ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் கெஜ்ரிவால் இல்லத்தில் நடந்தது. அதன்படி, டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிஷி பெயரை கெஜ்ரிவால் முன்மொழிய, பின்னர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார் என்று வட்டாரங்க ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. “மாலை கெஜ்ரிவால் ஆளுநரை சந்திக்கும்போதே அதிஷியும் சந்தித்து பதவியேற்க கடிதம் கொடுப்பார்” எனத் தெரிகிறது.

முன்னதாக, எம்எல்ஏக்கள் கூட்டத்தில், டெல்லி அமைச்சர்கள் கைலாஷ் கெலாட், அதிஷி, கோபால் ராய், துணை சபாநாயகர் ராக்கி பிர்லா, கெஜ்ரிவால் மனைவி சுனிதா உள்ளிட்ட பல பெயர்கள் முதல்வர் பதவிக்குப் பரிசீலனை செய்யப்பட்டது. இறுதியாக அதிஷியை முதல்வராகத் தேர்வு செய்வது என ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.