செப். 22 இல் ஜனாதிபதியாக ரணில் மீண்டும் பதவியேற்பு! – வேலுகுமார் எம்.பி. ஆரூடம்.

வரும் 22 ஆம் திகதி எமது நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பது உறுதி என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தெரிவித்தார்.
கம்பளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ மலையகப் பெருந்தோட்ட மக்கள் கடந்த காலங்களில் ஓரங்கப்பட்டும் நிலை இருந்தது. குறிப்பாக நிவாரணக் கொடுப்பனவுகளின்போது, ஏதோவொரு காரணம் காட்டி தோட்ட மக்கள் தட்டி கழிக்கப்படுகின்றனர். ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஸ்வசும கொடுப்பனவை மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு முதல் ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்த அரசிலேயே மலையக மக்களுக்கு அதிகபட்சமான வேலைகள் நடைப்பெற்றன.
தனி வீட்டுத் திட்டத்துடனான புதிய கிராமங்கள், நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் அதிகரிப்பு மற்றும் பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு என பல விடயங்களைக் கூறிக்கொண்டு போக முடியும். எதிர்வரும் 22 ஆம் திகதி எமது நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பது உறுதி.
அதன் பின்னர் அன்று நாம் நிறுத்திய வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பித்து முன்கொண்டு செல்ல முடியும். எனவே, நாட்டுக்கும் நமக்கும் வெற்றி கிட்டும் வழி ரணிலின் வழியே ஆகும்.” – என்றார்.