தமிழர்கள் திரண்டு ஒற்றுமையாக சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும் யாழ். நல்லூர் கிட்டு பூங்கா பரப்புரைக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் எம்.பி. சுமந்திரன் கோரிக்கை.

வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு ஒற்றுமையாகச் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.

ஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி ஏற்பாடு செய்த பிரசாரக் கூட்டம் யாழ். நல்லூர் கிட்டு பூங்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“யுத்தம் முடிவடைந்த பின்னர் நடைபெற்ற மூன்று ஐனாதிபதித் தேர்தல்களிலும் நாங்கள் தேர்ந்தெடுத்து அறிவித்த வேட்பாளருக்கு எங்களுடைய மக்கள் 80 சதவீத அளவிலே கூட ஒன்றாகச் சேர்ந்து ஒற்றுமையாக வாக்களித்து இருக்கின்றார்கள்.

அதன் மூலமாக பெரும் செய்தியையும் சொல்லி வந்திருக்கின்றார்கள். தாயகம் என்று சொல்கின்றார்கள். தாயகம் எங்கே இருக்கின்றது? அது எமது நிலத்திலே எமது மக்களிடமே இருக்கின்றது. எமது மக்கள் வாழ்வதிலேதான் அது தங்கியிருக்கின்றது.

தேசமாக நாங்கள் எழுவோம் என்று சொல்லுகின்றபோது ஒரு நிலப் பரப்பிலே மக்கள் கூட்டமாக நாங்கள் வாழுகின்றபோதுதான் நாங்கள் தேசமாக இருப்போம்.

அந்த வாழுகின்ற உரிமையை நாங்கள் கைப்பற்ற வேண்டுமாக இருந்தால் – எங்கள் வசம் வைத்திருக்க வேண்டுமாக இருந்தால் இருக்கின்ற எங்களது இருப்பையே பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் பல சூட்சுமங்களை நாங்கள் செய்ய வேண்டும்.

அதிலே ஒரு பிரதானமான விடயம்தான் நாட்டினுடைய ஐனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது. எங்களைக் கொன்று குவித்த முன்னாள் இராணுவத் தளபதிக்கு எங்களுடைய மக்கள் மதிநுட்பத்தினாலே வாக்களித்தார்கள். அதுவும் ஒற்றுமையாக வாக்களித்து பெரும் செய்தியைச் சொன்னார்கள்.

சிங்களவனுக்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்று எங்களுடைய மக்கள் மறுத்து புறந்தள்ளி இருக்கவும் இல்லை. பகிஷ்கரிக்கவும் இல்லை. தமிழனுக்கு வாக்களிக்க வேண்டுமென்று சொல்லி சிவாஜிலிங்கத்திற்குக் கூட வாக்களிக்கவேயில்லை.

ஆகவே, இம்முறையும் தீர்க்க தரிசனத்தோடு – தூரநோக்கோடு – மதிநுட்பத்தோடு வாக்களியுங்கள். சிங்கள வேட்பாளருக்குத்தான் வாக்களிக்கப் போகின்றீர்கள். கடந்த மூன்று தேர்தல்களிலும் சிங்கள வேட்பாளருக்குத்தான் வாக்களித்தீர்கள்.

இவ்வாறு கடந்த மூன்று தேர்தல்களிலும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்தவர்கள் – வீதி வீதியாகத் துண்டுப்பிரசுரம் கொடுத்தவர்கள் இன்றைக்குத் திடீரென்று ஏதோ நேற்றைக்குத்தான் பிறந்தவர்களைப் போல் இன்றுதான் தமிழர்களாகப் பிறந்தவர்களைப் போல் தமிழன் தமிழனுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று இனவாதத்தைக் கக்குகின்றார்கள்.

அது இனவாதம்தான். எங்களுடைய கட்சியை மலினப்படுத்துவதற்கும், எங்களுடைய கட்சியைப் பலவீனப்படுத்துவதற்கும் வெளியிலே இருந்து செய்த சதிகள் ஓரளவுக்காவது வெற்றி பெற்றிருக்கின்றது என்பதுதான் எங்களது ஆதங்கம்.

அப்படியாகக் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு கட்சியை மலினப்படுத்துபவர்களுக்கு நீங்கள்தான் இறுதியிலே சரியான பாடம் புகட்ட வேண்டும். ஆகவே, மக்கள்தான் சரியான தீர்ப்பைக் கொடுக்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்க்கமாக முடிவு எடுத்தது. இதை இப்படிச் சொல்ல வேண்டியிருப்பதே எனக்கு வெட்கமாக இருக்கின்றது.

உண்மையில் ஒரு கட்சி ஒரு முடிவு எடுத்தால் ஒரு அறிவிப்போடு முடிந்த முடிவுதான். அதனைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் மேலும் அறிக்கைகள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுச்செயலாளர் கையெழுத்துப் போட்டு கடிதங்கள் அனுப்ப வேண்டிய தேவையும் இல்லை. ஆனால், இன்றைக்கு அந்தத் தேவை ஏற்பட்டிருக்கின்றது.

அது எங்களுடைய கட்சியை மலினப்படுத்துவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் வெளியிலே இருந்து செய்த சதிகள் ஓரளவுக்காவது வெற்றி பெற்றிருக்கின்றது என்பதுதான் எங்களுடைய ஆதங்கம்.

அவ்வாறானவர்களுக்கு மக்கள்தான் சரியான பதிலடியைத் திரும்பக் கொடுக்க வேண்டும். அவ்வாறு மக்கள் கொடுக்கின்ற தீர்ப்புதான் நிரந்தரமானதும் இறுதியானதும் அறுதியானதுமாக இருக்கும்.

ஆகையினாலே இந்தக் குழப்பங்களையெல்லாம் காண்கின்ற நீங்கள் இந்தக் குழப்பங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து நாங்கள் மதிநுட்பமுள்ள மக்கள், எங்களுக்கு வழிகாட்டுகின்ற இந்தத் தாயகக் கட்சி சொல்லியிருக்கின்றபடி தீர்க்கமான முடிவெடு்த்து எங்களுக்கு அறிவித்திருக்கின்றபடி செயற்பட வேண்டும்.

அதாவது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றுதிரண்டு ஒற்றுமையாக சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்ததைப் போல் இந்தத் தேர்தலிலும் தமிழ் மக்கள் திரண்டு ஒற்றுமையாக சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஓர் அன்புக் கட்டளையாக நான் உங்களிடம் முன்வைக்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.