கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி
துபாயில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து கேரளத்துக்கு திரும்பிய நபர் ஒருவர் ‘குரங்கு அம்மை’ தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. மலப்புரம் மாவட்டம் எடவண்ணா பகுதியைச் சேர்ந்த 38 வயதான நபர், குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகளுடன் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
அண்மையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளம் திரும்பிய அந்த நபருக்கு காய்ச்சல், உடலில் அரிப்பு மற்றும் புண்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றிருந்த நிலையில், அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன.
இந்த நிலையில், அவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து திரும்புவோர் தங்கள் உடலில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கக் கோரி கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
குரங்கம்மைக்கு சிகிச்சையளிக்க குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கூடுதல் மருத்துவ வசதிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.