திருப்பதி லட்டு பிரசாதத்தில், விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் குற்றச்சாட்டு
ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதத்தில், விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் மங்களகிரியில் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, கடந்த ஆட்சியின் போது திருப்பதி மலையில் புனிதத்தை கெடுத்து விட்டதாக சாடினார். லட்டு பிரசாதம் தயார் செய்ய முழுவதுமாக கலப்படம் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தி வந்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.
முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதம் தயார் செய்ய விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாகவும் சந்திரபாபு நாயுடு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் தரமான பொருட்களை பயன்படுத்தி பிரசாதங்கள் தயாரித்து வருவதாகக் கூறிய சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைத்தே தீரும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.