வாக்கு உங்கள் உரிமை கட்டாயம் அதனைப் பயன்படுத்துங்கள் என்று மக்களிடம் தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை.
“வாக்கு உங்கள் உரிமை, பலம். அதனைக் கட்டாயம் பயன்படுத்துங்கள்.”
இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.எல்.ரத்நாயக்க.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-
“ஜனாதிபதித் தேர்தலை நீதியாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே, செப்டெம்பர் 21 ஆம் திகதி இயலுமானவரை காலை வேளையிலேயே சென்று வாக்குரிமையைப் பயன்படுத்திவிடுங்கள்.
வாக்களித்த பின்னர் வீடுகளுக்குச் செல்லுங்கள். தேர்தல் விதி மீறல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு செய்தால் பொலிஸாரால் கைது செய்யப்படக்கூடும்.
அத்துடன், வாக்களிப்பின்போது வாக்குச்சீட்டை படமெடுத்தல், வீடியோ எடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.” – என்றார்.