நாளைமறுதினம் தேர்தல் சகல ஏற்பாடுகளும் தயார் – பொலிஸார், முப்படையினரின் பாதுகாப்பும் பலப்படுத்தல்.
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தல் நாளைமறுதினம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கின்றன என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், நாடு முழுவதும் பொலிஸார் மற்றும் முப்படையினர் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“நாடு முழுவதும் தேர்தல் கடமைகளுக்காக 63ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதற்கு மேலதிகமாக முப்படையினரும் பாதுகாப்பு வழங்கவுள்ளனர்.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 பொலிஸார் வீதம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. அதனைப் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து வழங்கவுள்ளனர்.
நாடு முழுவதும் பொது மக்களுக்காகப் பாதுகாப்பும் மற்றும் ஏனைய தேர்தல் செயற்பாடுகளுக்காகப் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸார், முப்படையினர் மற்றும் புலனாய்வுத்துறையினர் இணைந்து விசேட செயல்பாட்டு மையமொன்றை உருவாக்கியுள்ளனர். இந்த மையம் தேர்தல்கள் திணைக்களம் மற்றும் ஆணைக்குழுவுடன் இணைந்து பணியாற்றும்.” – என்றார்.