தொகுதி மட்ட தேர்தல் அலுவலகங்களை இன்று நள்ளிரவுக்கு முன் நீக்க வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு.
தொகுதி மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்து தேர்தல் அலுவலகங்களையும் இன்று நள்ளிரவுக்கு முன்னர் நீக்குவது அவசியம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று நள்ளிரவு முதல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பிரதான அலுவலகமும், பழைய தொகுதிக்கு ஒரு அலுவலகமும் மாத்திரமே திறக்கப்பட முடியும்.
ஏற்கனவே நிறுவப்பட்ட ஏனைய அனைத்து அலுவலகங்களையும் அந்தந்த வேட்பாளர்கள் அகற்ற வேண்டும் என்பதுடன் அவ்வாறு அகற்றாவிட்டால் பொலிஸார் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி தேர்தல் தினத்தன்று பிற்பகல் 4.15 மணிக்கு ஆரம்பமாகும். எண்ணும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உரிய முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
உத்தியோகபூர்வ முடிவுகள் கிடைக்கப்பெறும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.” – என்றார்.