பிரபல ரவுடியைச் சுட்டுக்கொன்ற சென்னை காவல்துறை.

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சென்னை காவல்துறையினரால் ‘என்கவுன்ட’ரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவர் மீது 59 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பல்வேறு கொலை, கொள்ளை முயற்சி வழக்குகளில் தொடர்புள்ள ரவுடி பாலாஜி, கட்டப்பஞ்சாயத்தும் செய்து வந்ததாகத் தெரிகிறது.

காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்ததை அடுத்து, சென்னை நகருக்குள் நுழையாமல் இருந்தார் ரவுடி பாலாஜி.

புதன்கிழமையன்று தனது கூட்டாளிகளுடன் சென்னை புறநகர்ப் பகுதியான கொடுங்கையூருக்கு காரில் வந்ததாகத் தெரிகிறது.

அச்சமயம் அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் காரை தடுத்து நிறுத்த முயன்றபோது, காரை நிறுத்தாமல் சென்றதால் காவலர்கள் விரட்டிச் சென்றனர்.

பின்னர் வியாசர்பாடி பகுதியில் அந்தக் காரை மடக்கி நிறுத்திய போதுதான் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி அந்த காருக்குள் இருப்பது தெரிய வந்தது.

அவரைப் பிடிக்க காவல்துறையினர் முயன்றபோது, பாலாஜி துப்பாக்கியால் இருமுறை சுட்டுள்ளார்.

இதையடுத்து கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தற்காப்புக்காக சுட்டபோது, பாலாஜியின் மார்பில் குண்டு பாய்ந்தது.

சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னைக்கு அருகே உள்ள மூலக்கொத்தளம் பகுதியில் உள்ளது காக்கா தோப்பு. அங்கு ஆதிக்கம் செலுத்தி வந்த யுவராஜ் என்ற ரவுடி கொலை செய்யப்பட்டான்.

யுவராஜுக்குப் பின், அங்கு பாலாஜி வைத்ததுதான் சட்டமாக இருந்தது என்றும் அதன் பிறகு தன்னை எதிர்த்த பலரை அவர் கொன்றார் என்றும் கூறப்படுகிறது.

பல்வேறு வழக்குகளில் சிக்கியிருந்த பாலாஜி, சிறைக்குச் செல்வதும் பின்னர் வெளியில் வருவதுமாக இருந்தார்.

இந்நிலையில், காவல்துறை மேற்கொண்ட என்கவுன்டர் நடவடிக்கையின் மூலம் அவரது ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.