சீமானுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திடீர்ப் போர்க்கொடி.
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்வாதிகாரத்துடன் நடந்துகொள்வதாகவும் அவரது பேச்சுக்கும் செயலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் திருச்சியைச் சேர்ந்த அக்கட்சி நிர்வாகிகள் விமர்சித்துள்ளனர்.
சீமான் பல ஆண்டுகளாக தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் உழைப்பைச் சுரண்டி, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் சாடியுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியில் திடீர் பூசல் நிலவுகிறது. சீமானுக்கு எதிராக பத்துக்கும் மேற்பட்ட திருச்சி மாவட்ட நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது சீமானுக்கு எதிராக தாங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதை உறுதி செய்தனர்.
சீமான் கட்சி நிர்வாகிகள் யாரையும் சுயமாகச் செயல்பட அனுமதிப்பதில்லை என்றும் ஒற்றை ஆளாக தன்னை மட்டுமே அவர் ராணுவமாகக் கருதுகிறார் என்றும் எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டனர்.
“இதனால்தான் கடந்த தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை இழந்தோம். கட்சியில் தன்னைத் தாண்டி யாருமே பிரபலமாகிவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருக்கிறார்.
“இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அங்குள்ள தமிழர்களுக்காக பணம், பொருள் வசூல் செய்து கொடுத்தோம். அவை இதுவரை அவர்களைச் சென்று சேரவில்லை.
“தமிழ்த் தேசிய அரசியலை ஏற்றுக்கொண்ட எங்களால், இனியும் சீமானுக்கு அடிமையாக இருக்க முடியாது. சீமான் இதுவரை கட்சியை விட்டு பலரை நீக்கியுள்ளார். அதற்கான காரணத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்,” என்று எதிர்ப்பாளர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் மேலும் குறிப்பிட்டனர்.