இறையாண்மை பத்திரதாரர்கள் கடன் மறுசீரமைப்பிற்கு கொள்கையளவில் ஒப்புதல்.
12.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைப்பதற்கு இலங்கை அரசாங்கமும் சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களும் கொள்கையளவில் உடன்பாட்டை எட்டியுள்ளதாக லண்டன் பங்குச் சந்தை நேற்று (19) பிற்பகல் அறிவித்துள்ளது.
12.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைப்பதற்கு இலங்கை அரசாங்கமும் சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களும் கொள்கையளவில் உடன்பாட்டை எட்டியுள்ளதாக லண்டன் பங்குச் சந்தை நேற்று (19) பிற்பகல் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 2022 இல், இலங்கை தனது கடனை இறையாண்மை பத்திரங்கள் மூலம் திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தியது, பின்னர் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது.
ஆலோசனை நிறுவனங்களான Clifford Chance மற்றும் Lazard ஆகியோர் இலங்கையின் சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், அதே நேரத்தில் பத்திரதாரர்கள் சார்பாக White and Case மற்றும் Rothschild ஆகியோர் ஈடுபட்டனர்.
இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைப்பது தொடர்பான முக்கியமான சுற்று கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் (18) இடம்பெற்றதுடன், அந்த சுற்றுப் பேச்சுக்களின் பின்னரே கொள்கை உடன்பாடு எட்டப்பட்டது.
இந்தக் கொள்கை உடன்படிக்கைக்கு இலங்கை அமைச்சரவையும் இன்று காலை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக லண்டன் பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இறையாண்மைப் பத்திரங்கள் தொடர்பாக எட்டப்பட்ட ஒப்பந்தம் குறித்து உத்தியோகபூர்வ கடன் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
இந்த முடிவுகள் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் அடிப்படை கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது பரிசீலிக்கப்படும்.
உத்தியோகபூர்வ கடன் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, முன்மொழியப்பட்ட முறை செயல்படுத்தப்படும்.
இதேவேளை, இருதரப்பு கடனாளர்கள், இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்கள், சீனா எக்சிம் மற்றும் அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் உத்தியோகபூர்வ குழுவுடன் செய்து கொள்ளப்பட்ட கொள்கை உடன்படிக்கைகளின் அடிப்படையில் இலங்கைக்கு 17 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் நிவாரணம் கிடைக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று பிற்பகல் அறிவித்தது.