அஷ்வின், ஜடேஜா அசத்தல்,இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது .
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. வழக்கமாக சென்னையில் ‘டாஸ்’ வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்யும்.
இதற்கு மாறாக வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, ‘டாஸ்’ வென்று பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா என இரு சுழல் பவுலர்கள் மட்டும் இடம்பெற்றனர். ‘வேகத்தில்’ பும்ரா, சிராஜ், ஆகாஷ் சேர்க்கப்பட்டனர்.
இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. துவக்கத்தில் ஆடுகளம் வேகத்துக்கு சாதகமாக அமைய, வங்கதேசத்தின் ஹசன் மஹ்முத் மிரட்டினார். இவரது 2வது ஓவரில், ‘அம்பயர் கால்’ உதவியால் தப்பினார் ரோகித். அடுத்து 3வது ஓவரை வீசிய ஹசன், முதல் பந்தில் ரோகித்தை (6) அவுட்டாக்கினார். தொடர்ந்து தனது 4 வது ஓவரில் சுப்மன் கில்லை ‘டக்’ அவுட்டாக்கினார்.
பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய கோலி, 6 ரன் மட்டும் எடுத்து, ஹசனின் 5வது ஓவரில் அவுட்டாக, ரசிகர்கள் ‘ஷாக்’ ஆகினர். இந்திய அணி 34/3 ரன் என திணறியது.
ஜெய்ஸ்வால், ரிஷாப் பன்ட் இணைந்து போராடினர். இந்நிலையில் மீண்டும் மிரட்டிய ஹசன், ரிஷாப்பை (39) வெளியேற்றினார். நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால், டெஸ்ட் அரங்கில் 5வது அரைசதம் எட்டினார். இவர் 56 ரன் எடுத்த நிலையில், நாஹித் பந்தில் அவுட்டானார். அடுத்த சில நிமிடத்தில் லோகேஷ் ராகுலும் (16) திரும்ப, இந்திய அணி 144/6 ரன் எடுத்து மீண்டும் தள்ளாடியது.
அடுத்து ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தார் அஷ்வின். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹசன் பந்தில் இப்போட்டியின் முதல் சிக்சர் அடித்தார் ஜடேஜா. மறுபக்கம் சாகிப் அல் ஹசன் வீசிய முதல் ஓவரில், தன் பங்கிற்கு சிக்சர் விளாசினார் அஷ்வின்.
சாகிப் வீசிய 2வது ஓவரில் ஜடேஜா அடுத்தடுத்து பவுண்டரி அடிக்க, ‘டி-20’ போட்டி போல ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஜடேஜா 21வது அரைசதம் எட்டினார். இந்த இருவரது ரன்குவிப்பு கைகொடுக்க இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. மெஹிதி ஹசன் மிராஜ் பந்தில் அஷ்வின் சிக்சர் அடிக்க, இந்திய அணியின் ஸ்கோர் 300 ரன்களை கடந்தது. தொடர்ந்து அசத்திய அஷ்வின், 108 வது பந்தில் சதம் எட்டினார். இது இவரது 6வது சதம் ஆனது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 339 ரன் எடுத்திருந்தது. அஷ்வின் (102), ஜடேஜா (86) அவுட்டாகாமல் இருந்தனர்.
டெஸ்டில் அறிமுகம் ஆன பின், சொந்தமண்ணில் தொடர்ந்து அதிக முறை 50, அல்லது அதற்கும் மேல் ரன் எடுத்த இந்திய வீரர் ஆனார் ஜெய்ஸ்வால் (6 முறை). இதற்கு முன் ருசி மோடி 5 முறை இதுபோல ரன் எடுத்திருந்தார்.
இந்தியாவின் அஷ்வின் (102), ஜடேஜா (86) இணைந்து நேற்று, 7வது விக்கெட்டுக்கு 225 பந்துகளை எதிர்கொண்டு, 195 ரன் சேர்த்து, அவுட்டாகாமல் இருந்தனர்.
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் 7வது விக்கெட் அல்லது அதற்கு பிந்தைய விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த ஜோடி என அஷ்வின்-ஜடேஜா பெருமை பெற்றனர். முன்னதாக 2004ல் சச்சின்-ஜாகிர் கான் ஜோடி 10 வது விக்கெட்டுக்கு 133 ரன் சேர்த்திருந்தது.