போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர் சிங்கப்பூரில் கைது.
போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக, பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையம் அருகே உள்ள தரைவீட்டில் கைது செய்யப்பட்ட 31 வயது சிங்கப்பூரர் ஒருவர், சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டு மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவால் (சிஎன்பி) வியாழக்கிழமை (செப்டம்பர் 19) கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் கடத்தியதாக வெள்ளிக்கிழமை அவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
சிங்கப்பூர் அதிகாரிகள் பெயரிடப்படாத அந்த ஆடவர், செவ்வாய்க்கிழமை தாய்லாந்துக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இரு நாள்கள் கழித்து அவர் சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டதாக சிஎன்பி கூறியது.
அந்த ஆடவர் குறித்து ஆகஸ்ட் 12ஆம் தேதி தாய்லாந்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு (ஓஎன்சிபி) சிஎன்பி தகவல் அளித்ததாக அதன் தலைமைச் செயலாளர் பனுரட் லக்பூன் சொன்னார்.
2020 டிசம்பர், 2022 நவம்பரில் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட இரு வேறு சம்பவங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த சிங்கப்பூரரின் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்ததாக சிஎன்பி வியாழக்கிழமை தெரிவித்தது.
சிங்கப்பூருக்குப் போதைப்பொருளைக் கடத்தி, இங்கு அதனை விற்க குற்றவாளிகளுக்கு போதைப்பொருளை விநியோகித்த சந்தேகத்திற்காக அவருக்கு எதிராக கைதாணை பிறப்பிக்கப்பட்டது.
2016 ஏப்ரல் 11ஆம் தேதிக்குப் பிறகு அந்த ஆடவர் சிங்கப்பூரில் இல்லை என்பதைக் குடிநுழைவுப் பதிவேடுகள் காட்டின. இதனால் ஓஎன்சிபி உட்பட தன் வெளிநாட்டு சகாக்களை உதவிக்காக சிஎன்பி தொடர்புகொண்டது.
அந்த ஆடவர் சிங்கப்பூர் கைதாணையிலிருந்து தப்பி, தாய்லாந்தில் வசித்து வந்ததாக தனது தாய்லாந்து சகாக்களிடம் சிஎன்பி கூறியிருந்தது.
இவ்வாண்டு முன்னதாக வனுவாட்டு நாட்டுக் கடப்பிதழுடன் அந்த ஆடவர் தாய்லாந்துக்குள் நுழைந்தது கண்டறியப்பட்டதாக தாய்லாந்துக் குடிநுழைவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘கிரிஸ்டல் மெத்’, ‘கெட்டமின்’, ‘எக்ஸ்டசி’ போன்ற போதைப்பொருள்களை ஆஸ்திரேலியாவுக்கும் சிங்கப்பூருக்கும் அனுப்ப தாய்லாந்தை ஓர் இடைவழித் தளமாகப் பயன்படுத்தியதாக அந்த ஆடவர் மீது குற்றச்சாட்டப்படுகிறது.
அவர் முறையான வேலை செய்யாமல் வழக்கத்திற்கு மாறாக வசதியான வாழ்க்கைமுறையைக் கொண்டிருந்ததாக லெஃப்டினன்ட் ஜெனரல் பனுரட் கூறினார்.
பாங் காயோ எனும் சிற்றூரில் அந்த ஆடவர் வாடகைக்கு வசித்து வந்த தரைவீட்டில் தாய்லாந்துக் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். அதில், ஒன்றுக்கும் மேற்பட்ட ஆடம்பரக் கைக்கடிகாரங்கள், தங்க உபகரணங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
அந்த ஆடவரின் கைவசம் இருந்த 15 மில்லியன் பாட் (S$585,000) ரொக்கம், ஆடம்பர கார் உள்ளிட்ட சொத்துகளை தாய்லாந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.