இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த காவல்துறையினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த 33 வயது இளம்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து புளியங்குளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.
அப்போது அந்தப் பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துப் பேசி வந்து உள்ளனர்.
புதன்கிழமை (செப்டம்பர் 18) இரவும் அந்தப் பெண்ணும், வாலிபரும் மானாமதுரை நகரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முந்திரிகாட்டில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மது போதையில் வந்த ஒரு கும்பல் 2 பேரிடமும் தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த வாலிபரை சரமாரியாகத் தாக்கினர். இதனால் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டு விட்டு வாலிபர் ஓடி விட்டார்.
பின்னர் அந்தக் கும்பல் இளம்பெண்ணை அங்கிருந்து கடத்தி வேறு ஓர் இடத்திற்குச் சென்றனர். அங்கு இளம்பெண்ணை சரமாரியாகத் தாக்கி, 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றும் அந்தப் பெண்ணால் முடியவில்லை. அதிகாலை வரை இந்தக் கொடுமை நிகழ்ந்தது. பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியது.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மானாமதுரை காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக முத்துக்குமார் என்பவரை விசாரிக்கச் சென்றனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இருப்பினும் காவல்துறையினர் அவரைத் துரத்திச் சென்றனர். தொடர்ந்து முத்துக்குமார் காவல்துறையினரைத் தாக்கி விட்டுத் தப்ப முயன்றார்.
இதையடுத்து காவல்துறையினர் துப்பாக்கியால் முத்துக்குமாரின் வலது காலை நோக்கி சுட்டனர். இதில் காலில் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்தார். தொடர்ந்து அவரைப் பிடித்த காவல்துறையினர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு காவல்துறை பாதுகாப்பில் முத்துக்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முத்துக்குமாரை தவிர இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யார் என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் மானாமதுரை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.