ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றவா?
விசேட கண்காணிப்புக் குழுவைப் பணியில்
ஈடுபடுத்தியது மனித உரிமை ஆணைக்குழு
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முறைகேடுகள் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் விசேட கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அது மாத்திரமன்றி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் கடந்த ஒரு மாதகாலமாக தேர்தல் வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் வலுவான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் தேர்தல் தினமான நாளையும், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நாளைமறுதினமும்தமது குழுவினரை விசேட மனித உரிமைகள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இவ்விரு நாட்களும் நாடளாவிய ரீதியில் எந்தவொரு இடத்திலேனும் அடிப்படை உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று அறியக் கிடைத்தால், மேற்குறிப்பிட்ட பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள குழு அவ்விடத்துக்கு விஜயம் செய்து, நிலைமைகளை ஆராய்ந்து உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்.
எனவே, ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில் அதனுடன் தொடர்புடைய வகையில் எங்கேனும் அடிப்படை உரிமைகள் மீறப்படும் பட்சத்தில், அது குறித்து 076 7914695 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள குழுவுக்கு அறிவிக்க முடியும்.