“திருப்பதி லட்டுவில் எங்கள் நெய் பயன்படுத்தப்படுவதில்லை..” – அமுல் மறுப்பு
திருப்பதி லட்டில் தங்கள் நிறுவன நெய் பயன்படுத்தப்படவே இல்லை என்று பிரபல பால் பொருட்கள் நிறுவனமான அமுல் மறுப்பு தெரிவித்துள்ளது.
திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பான புகார் ஆந்திர அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் தான் இந்த முறைகேடுகள் நடந்ததாக முதலமைச்சர் சந்திரபாபு குற்றச்சாட்டியுள்ளார். மேலும் முதலமைச்சர் சொல்வது உண்மைதான் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகி சியாமளா ராவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை எனவும், 3 கட்ட சோதனைகளுக்குப் பிறகு தான் திருப்பதி லட்டுக்கு நெய் எடுத்துச் செல்லப்படுவதாகவும், கடவுளை வைத்து அரசியல் செய்து பொய் சொல்லாதீர்கள் என முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில் திருப்பதி லட்டில் அமுல் நெய் பயன்படுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவின. இது குறித்து அமுல் நிறுவனம் தனது அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் விளக்கம் அளித்துள்ளது. அதில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு தங்கள் நிறுவன நெய் விநியோகிக்கப்படுவதில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தங்கள் நிறுவன நெய் கடந்த அரை நூற்றாண்டாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதாகவும் தங்கள் நிறுவன நெய் சுத்தமான பாலில் தயாரிக்கப்பட்டு, பல தரப்பட்ட பரிசோதனைகளுக்குப் பிறகே சந்தைக்கு வருவதாகவும் அமுல் விளக்கமளித்துள்ளது. தங்கள் நிறுவனம் குறித்து தவறான தகவல் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த விளக்கத்தை அமுல் அளித்துள்ளது.
முன்னதாக திருப்பதி தேவஸ்தானம் கர்நாடக அரசு நிறுவனமான நந்தினியிடம் இருந்து நெய் வாங்கியதை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.