ஜனாதிபதித் தேர்தலில் 80 சதவீத வாக்குப் பதிவு.

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று மாலை 4 மணியுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையில் ஈடுபட்டனர்.
வன்முறைகள் மற்றும் சட்டமீறல்களைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொலிஸார் கடமைகளில் ஈடுபட்டதுடன் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதலாவது முடிவை இன்று நள்ளிரவு வெளியிட முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இந்தநிலையில், தற்போது மாவட்ட ரீதியாக அஞ்சல் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கமைய நாடளாவிய ரீதியில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் 80 சதவீதமும், கொழும்பு மாவட்டத்தில் 75 சதவீதமும், கம்பஹா மாவட்டத்தில் 80 சதவீதமும், புத்தளம் மாவட்டத்தில் 78 சதவீதமும், மொனராகலை மாவட்டத்தில் 77 சதவீதமும், பதுளை மாவட்டத்தில் 73 சதவீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், கண்டி மாவட்டத்தில் 76 சதவீதமும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்ணளவாக 65 சதவீதமும், வன்னி மாவட்டத்தில் அண்ணளவாக 65 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதேநேரம், இரத்தினபுரி மாவட்டத்தில் 74 சதவீதமும், கேகாலை மாவட்டத்தில் 72 சதவீதமும், குருநாகல் மாவட்டத்தில் 70 சதவீத வாக்குகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 64 சதவீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.