பிரிட்ஜில் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட இளம்பெண் உடல்: பெங்களூருவை உலுக்கிய பகீர் சம்பவம்!

கர்நாடகா மாநிலம், வயலிகாவல் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் இருந்து நேற்று இரவு (21ம் தேதி) கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இருந்த வீட்டினர். அந்தக் குறிப்பிட்ட வீட்டில் இருந்தவரின் தாய்க்கு போன் செய்து, உங்கள் மகள் வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வருகிறது. ஏதோ அசாதாரணமாக தோன்றுகிறது என கூறியுள்ளனர்.

இந்தத் தகவலை அடுத்து, மகாலட்சுமியின் தாய் தனது மற்றொரு மகளுடன் அவரின் மூத்த மகள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்திருக்கிறது. அதேசமயம், தன் மகலாட்சுமிக்கு போன் செய்தால் அதுவும் சுவிட்ச் ஆப் என்றே வந்துள்ளது. இதனால், அவர்கள் தங்களிடம் இருந்த மாற்று சாவியைக் கொண்டு வீட்டின் கதவை திறந்துள்ளனர். அந்த வீட்டை திறந்ததும், உள்ளே நுழைய முடியாத அளவிற்கு கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. அதேபோல், வீடு முழுக்க ரத்தம் சிந்தி, சிறு சிறு புழுக்கள் தரை முழுவதுமாக மொய்த்துக்கொண்டிருந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமியின் தாய், புழுக்கள் எங்கிருந்து வருகிறது என பார்த்துள்ளார். அப்போது அந்துப்புழுக்கள் எல்லாம் அந்த வீட்டில் இருந்த பிரிட்ஜில் இருந்துவந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து மகாலட்சுமியின் தாய் அந்த பிரிட்ஜை திறந்தபோது, அதில் துண்டுதுண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் ஒன்று இருந்துள்ளது. அதனைக் கண்டதும் அது தன் மகள் மகாலட்சுமி தான் என்பதை உணர்ந்த அவர், கத்தி கூச்சலிட்டுள்ளார். இதற்குள்ளாக இந்த விஷயம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்குவந்த கொலை நடந்துள்ள அந்த வீட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அதேசமயம், ஒரு பெண் கொலை செய்யப்பட்டு, பல துண்டுகளாக வெட்டப்பட்டு பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த தகவல் வேகமாக பரவே அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அதிகளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் குவிந்துள்ளனர்.

கூட்டத்தை கட்டுபடுத்தி கொலை நடந்த வளாகத்தையும், அந்த வீட்டையும் தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்த காவல்துறையினர் சந்தேக மரணம் எனும் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை துவங்கினர். முதலில் அந்த பிரிட்ஜின், மேல் பகுதியில் அந்த பெண்ணின் இரு கால்களும், மற்ற பாகங்கள் பிரிட்ஜின் மற்ற இடங்களிலும் வைத்துள்ள கொலையாளி, பெண்ணின் தலையை பிரிட்ஜின் அடிப்பகுதியில் வைத்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், கொலை நடந்த வீட்டிற்கு பிரேதப் பரிசோதனை மருத்துவர்கள், தடயவியல் நிபுணர்கள், கை ரேகை நிபுணர்கள், மோப்ப நாய் குழு உள்ளிட்டவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும், அந்தப் பெண்ணின் உடல் அங்கேயே முதற்கட்ட பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு பிறகு அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டிருப்பது மகாலட்சுமி என்ற 29 வயது பெண் என்பதும், அவர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், அவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மாலில் வேலை செய்துவருகிறார். இவர் திருமணமாகி சில வருடங்களுக்கு முன்பு அவரது கணவரை பிரிந்து தனியாக வசித்துவருகின்றார். இவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும், அவர் தனது தந்தை ஹேமந்த் தாஸ் என்பவருடன் வயலிகாவல் பகுதிக்கு அருகே தான் வசித்துவருகிறர். அவர் தனது மகளை அவ்வப்பொழுது தன் மனைவிடம் காட்ட கூட்டிவருவார். ஆனால், அங்கேயே தங்காமல் சென்றுவிடுவார் என்றும் காவல்துறை விசாரணை தெரியவந்துள்ளது. மேலும், மகாலட்சுமியை ஒரு அடையாளம் தெரியாத நபர் சில சமயங்களில் வீட்டில் விடுவதும், வீட்டில் இருந்து அழைத்தும் சென்றுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், முதலில் இந்தக் கொலை இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு நடைபெற்றது என போலீஸார் தெரிவித்திருந்த நிலையில், ஆனால், அந்த வீடு கடந்த 14 நாட்களாக பூட்டப்பட்டிருந்தது என்பதை அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் போலீஸ் விசாரணையில் அந்தப் பெண்ணின் செல்போன் கடந்த செப்டமபர் 2ம் தேதியில் இருந்தே ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையெல்லாம் அடிப்படையாக வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது அங்கிருக்கக்கூடிய சி.சி.டி.வி. காட்சிகள், மகாலட்சுமியின் செல்போன் அழைப்புகள் உள்ளிட்டவற்றை போலீஸார் சேகரித்துவருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.