சென்னையில் ஓட்டுநரற்ற மெட்ரோ ரயில் விரைவில் சேவையைத் தொடங்கும்.
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில், அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் சோதனைத் தடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (22.09.2024) மாற்றப்பட்டது.
ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யும் பணியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம், ஆந்திராவின் ஸ்ரீசிட்டியில் 08.02.2024ஆம் தேதி தொடங்கியது. முதல் மெட்ரோ ரயில் பெட்டிக்கான உற்பத்தி தொடங்கிய நிலையில் பெட்டியில் உள்ள பல்வேறு உபகரணங்களை பொருத்தும் பணிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து முதல் கட்ட மெட்ரோ ரயிலுக்கான அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளர் ஹர் சகாய் மீனா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனில்குமார் சைனி மற்றும் பொது ஆலோசகர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
ஆந்திராவின் ஸ்ரீசிட்டி உற்பத்தியாளர் வளாகத்தில் அனைத்து நிலையான சோதனைகளும் முடிந்த பின்னர், மெட்ரோ ரயில், சென்னை, பூந்தமல்லி பணிமனைக்கு அனுப்பப்படும்.
அதன் பிறகு, மெட்ரோ ரயில் கட்டம்-2 வழித்தடத்தில் பல்வேறு நிலையிலான சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்படும்.
அதனைத் தொடர்ந்து சட்டப்பூர்வ ஒப்புதல்களைப் பெற்று விரைவில் பயணிகளின் சேவையைத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.