அரசியலில் தூய்மை: இலங்கையின் புதிய அதிபர் திசாநாயக சூளுரை : இந்திய தலைவர்கள் வாழ்த்து.
இலங்கையின் புதிய அதிபராக இடதுசாரித் தலைவரான அனுராகுமார திசாநாயக திங்கட்கிழமை (செப்டம்பர் 23) பதவி ஏற்றார்.
கொழும்பு நகரில் உள்ள அதிபரின் தலைமைச் செயலகத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. திரு திசாநாயகவுக்கு தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெளத்த மடலாயங்களைச் சேர்ந்தவர்கள் போன்றோர் உள்ளிட்ட பலர் அந்த விழாவில் கலந்துகொண்டனர்.
பதவி ஏற்பு விழாவின் இறுதியில் ராணுவத்தினர் தேசிய கீதம் இசைத்தனர்.
55 வயதாகும் அதிபர் திசாநாயக, உள்நாட்டுப் போராலும் பொருளியல் வீழ்ச்சியாலும் சீர்குலைந்திருக்கும் இலங்கையில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கப்போவதாக சூளுரைத்து உள்ளார்.
பதவி ஏற்பு சடங்கிற்குப் பின்னர் பேசிய அவர், “தூய்மையான புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. அதனைச் செய்ய நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.
“மக்களின் மரியாதையையும் அரசியல் முறை மீதான அவர்களின் நம்பிக்கையையும் மீட்டெடுக்க
என்னால் ஆனதைச் செய்வேன்.
“எடுத்த எடுப்பில் மாற்றங்களைக் கொண்டுவர நான் ஒன்றும் மந்திரவாதி அல்ல.
“எனக்குத் தெரிந்த விஷயங்கள் இருக்கலாம்; தெரியாத விஷயங்களும் இருக்கலாம். சிறந்த முறையில் ஆலோசனை கேட்டு திறம்பட செயல்படுவேன். அதற்கு அனைவரின் ஆதரவும் எனக்குத் தேவை,” என்றார் அவர்.
புதிய அதிபர் பதவி ஏற்பதற்குச் சற்று முன்னர், இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்ன பதவி விலகினார். புதிய அதிபர் தமது அமைச்சரவையை ஏற்படுத்துவதற்கு உதவியாக அவர் தமது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தார்.
ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரை தமது சொந்த அமைச்சரவை, பதவியில் இருக்க வேண்டுமென அதிபர் திசாநாயக விரும்புகிறார்.
225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் திரு திசாநாயகவின் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு மூன்று உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
இலங்கை அதிபர் திசாநாயக்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இலங்கை அதிபர் தேர்தலில் நீங்கள் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துகள். இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் கடல்சார் தொலைநோக்கு ஆகியவற்றில் இலங்கை உயர் முன்னுரிமை இடத்தைக் கொண்டுள்ளது. நமது மக்கள் மற்றும் ஒட்டுமொத்த வட்டார மேம்பாட்டிற்காக நமது பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்த உங்களுடன் விரிவாகப் பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள அதிபர் திசாநாயக்க, “உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி. நமது நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான உங்கள் உறுதிப்பாட்டை நான் பகிர்ந்து கொள்கிறேன். நமது மக்கள் மற்றும் முழு வட்டார நலனுக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாம் இணைந்து பணியாற்றுவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் வெற்றியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் தலைவரான அநுரா குமார திசாநாயக்க, “பல நூற்றாண்டு நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நனவாகியுள்ளது. இந்தச் சாதனை எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. உங்களின் கூட்டு முயற்சியின் மூலமே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. உங்களின் அர்ப்பணிப்பு நம்மை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது. அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்தப் புதிய தொடக்கத்தின் அடித்தளமாக இருக்கும். புதிய மறுமலர்ச்சி கொண்ட இலங்கையைப் படைப்போம்,” என தெரிவித்திருந்தார்.