என்கவுன்டர் செய்யப்பட்ட ரெளடி சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் தொடர்பு இல்லை
என்கவுன்டர் செய்யப்பட்ட ரெளடி சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் தொடர்பு இல்லை என சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட ரெளடி சீசிங் ராஜா சென்னை நீலாங்கரை அருகே இன்று அதிகாலை காவல்துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
ரெளடி சீசிங் ராஜா பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய அவரை அழைத்துச் சென்றபோது காவல் துறையினரைத் தாக்கித் தப்பிக்க முயன்றதாகவும், அப்போது தற்காப்புக்காக சுட்டதில் சீசிங் ராஜாவுக்கு வயிறு மற்றும் நெஞ்சுப்பகுதியில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்ததாகவும் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பரான சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்குகள் உள்பட 32 வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி என்கவுன்டர் குறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்கம் கொடுத்தபோது, “எங்களுடைய விசாரணையில் இதுவரை சீசிங் ராஜவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. வேளச்சேரியில் தொழிலதிபர் ஒருவரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்த வழக்கிற்காக இவரைத் தேடி வந்தோம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீஸார் ஆந்திராவில் வேறு ஒரு விசாரணைக்காக சென்றிருந்தனர். அந்த நேரத்தில் சீசிங் ராஜா ஆந்திராவில் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்ததால் அவர்களின் முலம் அவரைக் கைது செய்தோம். விசாரணைக்குப் பிறகு மேலும் அதிகத் தகவல்களை வெளியிடுவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.