வீடுகளில் இன்று மாலை 6 மணிக்கு விளக்கேற்றுங்கள்…திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்
திருப்பதி லட்டில் மாட்டின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை கலக்கப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு கூறியது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் அதற்கான ஆய்வறிக்கை இந்த குற்றச்சாட்டை உறுதி செய்வதாகவும், முதலமைச்சர் கூறியது உண்மைதான் என்றும் திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகி சியாமளா ராவ் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டு பொய் என மறுத்துள்ள ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இதையடுத்து ஸ்ரீவாரி லட்டு பிரசாதத்தின் தெய்வீகத்தன்மையும், தூய்மையும் இப்போது கறைபடவில்லை எனவும், லட்டு பிரசாதத்தின் புனிதம் மீண்டும் மீட்கப்பட்டதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆனால் இதற்கு பரிகாரம் செய்யும் வகையில், கோயிலையும், லட்டு தயாரிக்கும் இடத்தையும் சுத்தப்படுத்துவதா அல்லது குடமுழுக்கு போல ஏதேனும் செய்வதா என திருப்பதி கோயிலின் தலைமை அர்ச்சகர்கள் மற்றும் ஆன்மிகப் பெரியோர்களிடம் முதலமைச்சர் சந்திரபாபு ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பை கலந்த தோஷத்தை போக்குவதற்காக இன்று மாலை 6 மணிக்கு பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி, “ஓம் நமோ நாராயணாய.. ஓம் நமோ பகவதே வாசுதேவாய.. ஓம் நமோ வெங்கடேசாய” என்று மந்திரத்தை உச்சரிக்கவும் தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.