பாகிஸ்தானியர்கள் அதிக அளவில் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்
பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மத யாத்திரை செல்வது போல இடம்பெயர்வது அதிகரித்துள்ளதாக ‘டைம்ஸ் ஆஃப் ஓமன்’ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
அந்த நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையோருக்கு வேலைக்கான அனுபவமோ தகுதியோ இல்லாததால் அவர்கள் தெருக்களில் பிச்சைக்காரர்களாக அலைவதாக ‘டைம்ஸ் ஆஃப் ஓமன்’ செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய கிழக்கு நாடுகளின் , பல நாடுகளில் பாகிஸ்தான் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அந்நாடுகளின் நாடாளுமன்றங்களில் பேசப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்த பிச்சைக்காரர்களில் கணிசமான எண்ணிக்கையில் பெண்களும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக மத்திய கிழக்கு நாடுகளில் பிச்சை எடுப்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 90% பேர் பாகிஸ்தானியர்கள் என தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வளர்ந்து வரும் நெருக்கடி காரணமாக, மத்திய கிழக்கு நாடுகள் மத நோக்கங்களுக்காக விசா வழங்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன, மேலும் அந்த நாடுகளில் தொழிலதிபர்கள் மற்றும் உயர் நிபுணர்களாக பணிபுரியும் பாகிஸ்தானியர்களின் நற்பெயரை பாதிக்கும் சிக்கலாக இவை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.