‘கலைத்துறை வித்தகர் விருது’ பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு ….
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் பாராட்டும் வகையில் தமிழ் நாடு அரசின் சார்பில், ‘கருணாநிதி நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ ஆண்டுதோறும் ஜூன் 3ஆம் தேதி வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2023ஆம் ஆண்டுக்கான ‘கருணாநிதி நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ பாடகி சுசீலா, கவிஞர் மு.மேத்தா ஆகியோருக்கு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ என்றும் ‘மெல்லிசை அரசி’ என்றும் அழைக்கப்படும் பாடகி பி.சுசீலா, 70 ஆண்டுகளுக்கு மேலான தன் இசைப் பயணத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பல மொழிகளில் பாடி சாதனை படைத்துள்ளார்.
கவிஞர் மு.மேத்தா, புதுக்கவிதை, மரபுக்கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரையென எண்ணற்ற படைப்புகளைத் தந்துள்ளார். இவர் 70க்கு மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதித் தனி முத்திரை பதித்தவர். இவர் மாநிலக்கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றியவர்.
திரைப்பட இயக்குநர் முத்துராமன் தலைமையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் கொண்ட குழு, விருதாளர்களைத் தேர்வு செய்தது.
விருதாளர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் நினைவுப் பரிசும் வழங்கப்படும். விருது வழங்கும் நிகழ்வு செப்டம்பர் 30ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடக்கவிருக்கிறது.