ஆசைக்கு இணங்க மறுத்த ஆறு வயது மாணவியைக் கொன்ற பள்ளி முதல்வர் கைது
தனது பாலியல் ஆசைக்கு உடன்பட மறுத்த ஆறு வயதுச் சிறுமியைக் கொன்ற சந்தேகத்தின்பேரில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி முதல்வர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஒன்றாம் வகுப்பில் படித்து வந்த அம்மாணவியின் உடல் இம்மாதம் 19ஆம் தேதி பள்ளி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது. அச்சிறுமி மூச்சு திணறி உயிரிழந்ததாக உடற்கூறாய்வு அறிக்கை தெரிவித்தது.
தோஹட் மாவட்டம், பிப்பலியா எனும் சிற்றூரில் அத்தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது.
சிறுமியின் மரணம் குறித்து விசாரிக்க பத்துக் குழுக்கள் அமைக்கப்பட்டதாக தோஹட் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜ்தீப் சிங் ஜாலா தெரிவித்தார்.
விசாரணையில், அச்சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளை பள்ளி முதல்வர் கோவிந்த் நாத்துடன் அவரது காரில் அனுப்பி வைத்ததைக் காவல்துறை கண்டுபிடித்தது.
பள்ளியிலிருந்து அவள் வீடு திரும்பாததை அடுத்து, கோவிந்திடம் அவளின் பெற்றோர் கேட்டனர். அதற்கு, தான் அவளைப் பள்ளியில் இறக்கிவிட்டுவிட்டதாக கோவிந்த் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, காவல்துறை கோவிந்தைக் காவலில் எடுத்து விசாரித்தது. விசாரணையின்போது, தனது பாலியல் ஆசைக்கு அச்சிறுமி உடன்பட மறுத்ததால் அவளைக் கொன்றுவிட்டதை கோவிந்த் ஒப்புக்கொண்டார்.
தான் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது அச்சிறுமி கத்தியதாகவும் அதனால் சத்தம் கேட்காமல் இருக்க அவளது வாயை இறுக்கமாகப் பொத்தியதாகவும் கோவிந்த் சொன்னார். ஆனால், மூச்சு திணறி அவள் இறந்துவிடவே, கோவிந்த் அவளது உடலைத் தன் காரில் வைத்து மறைத்தார்.
பின்னர் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று, பாடம் நடத்தினார் கோவிந்த். வகுப்புகள் முடிந்ததும் தன் காருக்குத் திரும்பிய அவர், சிறுமியின் உடைமைகளைப் பள்ளி வாயில் அருகே வீசிவிட்டு, அவளது உடலை வகுப்பறைக்குப் பின்னால் போட்டுவிட்டுச் சென்றார்.
மாலையில் உள்ளூர்வாசிகளுடன் பள்ளிக்குச் சென்ற அவளின் பெற்றோர், பள்ளி வாயில் அருகே அவளது உடைமைகளையும் பள்ளி வளாகத்தில் அவளது உடலையும் கண்டனர்.