முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் குற்றவாளி எனத் தீர்ப்பு; அக்டோபர் 3ல் தண்டனை விதிப்பு.
சிங்கையின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், தம்மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
அவருக்கு அக்டோபர் 3ஆம் தேதியன்று தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஸ்வரனுக்கு ஆறிலிருந்து ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசாங்க வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.
முதல் நாள் வழக்கு விசாரணை செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெற்றது. ஈஸ்வரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மை குறைக்கப்பட்டது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக அரசு ஊழியர் பதவி வகித்தபோது விலை மதிப்புள்ள பொருள்களை அன்பளிப்பாகப் பெற்றுகொண்டதாக ஈஸ்வரன் மீது இவற்றில் நான்கு குற்றச்சாட்டுகள் பிரிவு 165ன் கீழ் சுமத்தப்பட்டன.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 165, ஒரு பொதுச் சேவை ஊழியர், அவர் அதிகாரபூர்வ நிலையில் எவரிடமிருந்தும், விலைமதிப்புள்ள எதையும், இலவசமாக அல்லது போதிய கட்டணமின்றி ஏற்றுக்கொள்வது அல்லது பெறுவது குற்றமாகும்.
விசாரணைக்கு இடையூறு விளைவித்தது தொடர்பாகவும் ஈஸ்வரன் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அமைச்சர் பதவி வகித்தபோது $400,000க்கும் அதிக மதிப்புள்ள பொருள்களை ஈஸ்வரன் அன்பளிப்பாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
பெருஞ்செல்வந்தர் ஓங் பெங் செங், லம் சாங் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டேவிட் லம் ஆகியோரிடமிருந்து ஈஸ்வரன் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
$380,000 தொகையையும் முறையற்ற வகையில் பெறப்பட்ட அன்பளிப்புகளையும் அரசாங்கத்திடம் ஈஸ்வரன் திருப்பிக் கொடுத்துவிட்டத்தாகத் தெரிவிக்கப்பட்டது.
ஈஸ்வரனுக்கு எதிரான வழக்கு விசாரணை செப்டம்பர் 24ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கியது. தமது வழக்கறிஞருடன் காலை 9.25 மணி அளவில் அவர் உயர் நீதிமன்றத்தை அடைந்தார்.
காலை 10 மணிக்கு நீதிமன்ற விசாரணை தொடங்கியதும், ஈஸ்வரனின் வழக்கறிஞரான மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங், “ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்படவில்லை என்பதை கருத்தில் கொண்டு, எனது கட்சிக்காரர் நடவடிக்கை எடுப்பார்,” என்றார்.
விசாரணையின் தொடக்கத்தில் ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்ட 35 குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் அவருக்கு முன் வாசிக்கப்பட்டன. இதனைக் கேட்டுக்கொண்டிருந்த ஈஸ்வரன், உணர்ச்சி எதையும் வெளிப்படுத்தாமல் அமைதி காத்தார். இவை ஐந்து குற்றச்சாட்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், திரு ஈஸ்வரன் அந்த ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வதாகக் கூறினார். அதன்பிறகு விசாரணை முடியும்வரை மேற்கொண்டு அவர் நீதிமன்றத்தில் எதுவும் பேசவில்லை.
நட்பின் அடிப்படையில் பெருஞ்செல்வந்தர் ஓங்கிடமிருந்து தமது கட்சிக்காரர் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொண்டதாக ஈஸ்வரனின் வழக்கறிஞரான திரு தவிந்தர் சிங் நீதிமன்றத்தில் தமது வாதத்தை முன்வைத்தார்.
திரு ஓங், அரசாங்கத்துடன் வர்த்தக பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கு முன்பே அவரும் ஈஸ்வரனும் நண்பர்களாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
எஃப் 1 கார் பந்தயத்தைக் காணச் செல்லும் முக்கியமான விருந்தாளிகள் அறைக்கான நுழைவுச்சீட்டுகளைத் திரு ஓங்கிடமிருந்து ஈஸ்வரன் பெற்றுக்கொண்டதாகவும் இதை அவர் மறைக்கவில்லை என்றும் திரு சிங் கூறினார். இதுகுறித்து ஈஸ்வரன் தமது செயலாளரிடம் கூறியதைத் திரு சிங் சுட்டினார்.
அந்த நுழைவுச்சீட்டுகள் விற்பனைக்கானதல்ல என்பதால் திரு ஓங்கிற்கும் சிங்கப்பூர் எஃப் 1 கார் பந்தயத்துக்கும் எவ்வித இழப்பும் ஏற்படவில்லை என்று திரு சிங் வாதிட்டார்.
இதுகுறித்து பேசிய அரசாங்க வழக்கறிஞர், ஒவ்வொரு நுழைவுச்சீட்டின் விலை $4,000க்கும் அதிகம் என்றும் அவற்றை ஈஸ்வரன் தமது நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் கொடுத்ததாகக் கூறினார்.
அந்த 10 நுழைவுச்சீட்டுகளையும் இலவசமாகப் பெற்றுக்கொண்டதை ஈஸ்வரன் அரசாங்கத்திடம் தெரிவிக்கவில்லை என்றார் அவர்.
பல மணிநேரம் அரசாங்கத் தரப்பும் தற்காப்புத் தரப்பும் தங்கள் வாதங்களை முன் வைத்த பிறகு, நீதிபதி வின்சென்ட் ஹூங் வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவித்து வழக்கை அக்டோபர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
விசாரணை முடிந்ததும், உயர்நீதிமன்றத்தில் இருந்து தனியாக வெளியேறிய ஈஸ்வரன், கட்டிடத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறினார்: “உங்களுக்குத் தெரியும், எனது வழக்கறிஞர்கள் எனது நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியுள்ளனர். வழக்கு என்னும் முடியவில்லை. ஆகவே, நான் மேலும் எதுவும் கூற இயலாது. இங்கு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன் அடுத்த என்ன நடக்கிறது என்று பார்ப்போம்,” என்றார்.