ஜம்மு-காஷ்மீரில் இரண்டாம் கட்டத் தோ்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பு

ஜம்மு – காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு மையங்களைச் சுற்றிலும் பாதுகாப்புப் படையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். பல வாக்குச்சாவடிகளில் ஆண்களை விடவும், ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருவதையும் பார்க்க முடிகிறது.

வெப்-கேமரா வசதியுடன் 3,502 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. இதில் 157 வாக்குச்சாவடிகள் முழுக்க முழுக்க பெண்களால் நிா்வகிக்கப்படவுள்ளன. எல்லைப் பகுதியில் 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

பெண்கள் வரிசை
இன்று தேர்தல் நடைபெறும் 26 பேரவைத் தொகுதிகளில், 239 வேட்பாளா்கள் போட்டியிட்டுள்ள நிலையில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வாக்களிக்கிறார்கள்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாகத் தோ்தல் அறிவிக்கப்பட்டு, முதல்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பா் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 23 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த இத்தோ்தலில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒரு சில தொகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வாக்குகள் பதிவாகின.

தொடர்ந்து, ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி, ரஜெளரி, பூஞ்ச், காஷ்மீா் பகுதியில் உள்ள ஸ்ரீநகா், புத்காம், கந்தா்பால் ஆகிய 6 மாவட்டங்களின் 26 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தோ்தல் தொடங்கியது.

ஜம்மு-காஷ்மீா் பேரவைக்கான மூன்றாம் மற்றும் இறுதிகட்ட தோ்தல் அக்டோபா் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்பிறகு, அக்டோபா் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.