பெய்ருட் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி மரணம்.

லெபனான் தலைநகர் பெய்ருட்டின் தென்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதி மீது இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் மாண்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்‌ரேலியப் படை நடத்திய இத்தாக்குதலில் 15 காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மாண்டோரில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான இப்ராகிம் முகம்மது கொபெய்சியும் ஒருவர் என்று ஈரானிய ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா கூறியது.

ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணைப் பிரிவுத் தளபதியான கொபெய்சியைக் கொன்றுவிட்டதாக செப்டம்பர் மாதம் 24ஆம் தேதியன்று இஸ்‌ரேல் அறிவித்திருந்தது.

ஹிஸ்புல்லா ராணுவத் தலைவர்களுடன் கொபெய்சி நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக இஸ்‌ரேலிய ராணுவம் கூறியது.

இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் மூன்றாம் நிலை தலைவர் திரு அலி கராகே உயிருடன் இருப்பதாகவும் பாதுகாப்பான இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 23ஆம் தேதியன்று அவரைக் குறிவைத்து இஸ்‌ரேல் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஸா போர் தொடங்கியதிலிருந்து பெபனான்-இஸ்‌ரேல் எல்லைப் பகுதியில் இஸ்‌ரேலியப் படைகளுக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையே கிட்டத்தட்ட நாள்தோறும் மோதல்கள் ஏற்படுகின்றன.

ஆனால் அண்மையில் ஹிஸ்புல்லா போராளிகளின் அகவிகள், அலைப்பேசிகள் ஆகியவை வெடித்ததில் அவர்களில் சிலர் மாண்டனர், பலர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்‌ரேல் காரணம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சாட்டியது.

இதன் விளைவாக இருதரப்புக்கும் இடையே போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.