ஜனாதிபதித் தேர்தலின்போது நான் எவர் சார்பாகவும் செயற்படவில்லை – மக்கள் பக்கமே நின்றேன் என்று கூறுகின்றார் சார்ள்ஸ்.

“ஜனாதிபதித் தேர்தலின்போது நான் யாருக்காகவும், யார் சார்பாகவும் எந்த விடயங்களையும் கூறவில்லை. மக்கள் யாரை விரும்பி வாக்களிக்கின்றார்களோ அது மக்களின் விருப்பம் என்பது எனது கருத்தாக இருந்தது.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் என்னைச் சந்தித்து கதைத்தபோது இனவாதமற்ற இலங்கையையும், இலஞ்ச ஊழல் அற்ற இலங்கையையும் உருவாக்குவதற்காகத் தான் பாடுபடுவதாக என்னிடம் உறுதி அளித்திருந்தார்.

அந்தவகையில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க தனது உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும்.

இனவாதம் அற்ற நாடாக இலங்கை மாறுவதற்கும், இலஞ்ச ஊழல் அற்ற நாடாக இலங்கையைக் கொண்டு வருவதற்கும் அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கு – கிழக்கில் உள்ள தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர் நினைவில் வைத்து தனது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இதை நான் அவரிடம் கோரிக்கையாக முன்வைக்கின்றேன்.

ஜனாதிபதித் தேர்தலின்போது நான் யாருக்காகவும், யார் சார்பாகவும் எந்த விடயங்களையும் கூறவில்லை. மக்கள் யாரை விரும்பி வாக்களிக்கின்றார்களோ அது மக்களின் விருப்பம் என்பது எனது கருத்தாக இருந்தது.

பல்வேறுபட்ட குழப்பங்களுக்கு மத்தியில் இந்த ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

கடந்த 2 வருடங்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கதைத்து மன்னார் மாவட்டத்தில் இருந்த சில பிரச்சினைகளுக்குத் தீர்வை முன் வைத்தேன். முல்லைத்தீவிலும் ஏற்பட சில பிரச்சனைகளுக்கு ரணில் விக்கிரமசிங்க ஊடாக தீர்வைப் பெற்றுக்கொடுத்தேன்.

மக்களின் பிரச்சினைகளை நான் அவரிடம் முன்வைத்தபோது சில விடயங்களைச் சுமுகமான முறையில் தீர்த்து வைத்தார். அண்மையில் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு விஜயம் செய்தபோது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் வீட்டுக்கும் சென்றிருந்தார். அதேபோல் அண்மையில் மன்னாருக்கு வருகின்றபோது எனது வீட்டுக்கும் வரவுள்ளதாக ஜனாதிபதி கூறியிருந்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளடங்கலாகப் பல பிரச்சினைகளுக்கு சாதகமான பதிலை தந்ததன் அடிப்படையில் இங்குள்ள மக்களின் பிரச்சினைகளைக் கலந்தாலோசிக்கும் வகையில் அவரது வருகை அமைந்திருந்தது.

அதன் அடிப்படையில் அவர் இங்கு வந்து சென்றிருந்தார். இந்நிலையில், அண்மைக்காலமாக என் மீது சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.