செந்தில்பாலாஜிக்கு 471 நாட்களுக்கு பின் நிபந்தனை ஜாமின்
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனு மீது, உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் அளித்து தீர்ப்பளித்தனர்.
கடந்த அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்து, சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்த புகாரில், கடந்தாண்டு ஜூன் மாதம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இது தொடர்பாக செந்தில்பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்று, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில்,செந்தில்பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த ஓராண்டிற்கும் மேலாக குறிப்பாக 471 நாட்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு, இன்று ஜாமின் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கிடையே, காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வாசித்தது. நீதிபதிகள் அபெய் எஸ்.ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிக் ஆகியோர் தீர்ப்பளித்தனர். அதன்படி செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் அளித்து தீர்ப்பளித்தனர்.
நிபந்தனை என்னவென்பதை நீதிபதிகள் இப்போது சொல்லவில்லை. இன்று மாலைக்குள் நிபந்தனைகள் தெரிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
ஜாமின் கிடைத்ததை அடுத்து 15 மாதங்கள் கழித்து சிறையில் இருந்து வெளியே வருகிறார்.