பெங்களூரு பெண் கொலையின் முக்கிய குற்றவாளி தற்கொலை!
பெங்களூருவில் மகாலட்சுமி என்ற பெண்ணை துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்த சம்பவத்தில், முக்கிய குற்றவாளியாக காவல்துறையினர் அடையாளம் கண்டிருந்த முக்தி ராய் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள சுடுகாட்டின் அருகில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெண் படுகொலை
பெங்களூருவில், செப்டம்பர் 21ஆம் தேதி வாடகைக் குடியிருப்பில், இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, உடல் 56 துண்டுகலாக வெட்டப்பட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் மகாலட்சுமி என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவருடன் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் முக்தி ராய் என்பவருக்கு கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று மகாலட்சுமி கணவர் தெரிவித்திருந்தார்.
இதனிடையே முக்தி ராய் செல்ஃபோனை அணைத்துவிட்டு தலைமறைவானதை தொடர்ந்து, ஒடிசா – மேற்கு வங்க எல்லையில் அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
குற்றவாளி தற்கொலை
ஒடிசா மாநிலத்துக்கு தப்பி ஓடிய முக்தி ராயை பிடிக்க, 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்று வந்தன.
அவர் இருக்கும் இடம் சரியாக தெரியாத நிலையில், காவல்துறையினர் சந்தேகித்த பாலசோர் மற்றும் பத்ரக் மாவட்டங்களில் உள்ளூர் காவலர்களுடன் இணைந்து பெங்களூரு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், பத்ரக் மாவட்டத்தில் உள்ள வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தை எடுத்து சென்ற முக்தி ராய், சுடுகாடு அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், முக்தி ராயில் இரு சக்கர வாகனம் மற்றும் அதிலிருந்து மடிக்கணினியை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், அவரது வீட்டில் இருந்து கொலையை ஒப்புக் கொண்ட வாக்குமூலக் கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.