யாழில் பிக்மீ ஓட்டோ சாரதி மீது தாக்குதல்!
யாழ்ப்பாணத்தில் பிக்மீ ஓட்டோ சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான சாரதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதிலும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக நபர் ஒருவர், பிக்மீ அப்ஸ் மூலம் ஓட்டோ சேவையை நாடியபோது, அவ்விடத்துக்குச் சென்ற என்னை ஓட்டோ தரிப்பிடத்தில் தரித்து நின்ற ஓட்டோ சாரதி ஒருவர், சேவையை நாடிய நபரை என்னை ஏற்ற விடாது தடுத்து என் மீது தாக்குதல் நடத்தினார்.
என் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன். முறைப்பாட்டின் பிரகாரம் தாக்குதலாளியைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து, அவர் முன்னாடி விசாரணைகளை மேற்கொண்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் என்னை ஏசி, தாக்குதலாளிக்குச் சார்பாக நடந்து கொண்டார்.
தாக்குதலாளியும், மேற்படி பெண் பொலிஸ் உத்தியோகத்தர் முன்பாக என்னை வெட்டுவேன் என மிரட்டினார்.
அதனால் நான் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறி விட்டேன். இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லவுள்ளேன்.” – என்றார்.