முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன்: சித்தராமையா
கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என்று சித்தராமையா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் இருக்கிறது, அவர் ராஜிநாமா செய்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முடா நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனு அளித்தார்.
வழக்கின் விசாரணையில் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று நீதிபதி நாக பிரசன்னா உத்தரவிட்டு சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
தொடர்ந்து நேற்று எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கு குறித்து விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே முதல்வர் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்த நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, நான் ராஜிநாமா செய்ய மாட்டேன், நான் ஏன் ராஜிநாமா செய்ய வேண்டும்? எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், குமாரசாமி மீதும் வழக்குகள் உள்ளன, அவர் ராஜிநாமா செய்வாரா? அவர் முதலில் விலகட்டும், பிரதமர் மோடி ராஜிநாமாவை ஏற்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.