லாஸ் ஏஞ்சலிசில் பேருந்துக் கடத்தல்; ஒருவர் மரணம்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் பேருந்துக் கடத்தல் சம்பவத்தில் ஒருவர் மாண்டார்.

பேருந்தைக் கடத்தியதாக நம்பப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சலிஸ் காவல்துறை கூறியது.

அமெரிக்க நேரப்படி செப்டம்பர் 25ஆம் தேதி அதிகாலை 1 மணி அளவில் பேருந்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

துப்பாக்கி ஏந்திய ஆடவர் ஒருவர் பேருந்தை வழக்கமான பாதையிலிருந்து திசை திருப்ப ஓட்டுநரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதைப் பார்த்து பேருந்திலிருந்து தப்பிச் செல்ல பயணிகள் சிலர் பதற்றத்துடன் விரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கடத்தப்பட்ட பேருந்தைப் பல காவல்துறை கார்கள் பின்தொடர்ந்து சென்றதைக் காட்டும் காணொளிகள் வெளியிடப்பட்டன.

இந்நிலை ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது.

இதையடுத்து, பேருந்தின் டயர்களில் துளையிட்டு அவை காற்றிழக்கும் நோக்குடன் பேருந்து சென்றுகொண்டிருந்த சாலையில் அதிகாரிகள் கூர்மையான பொருள்களை வீசினர்.

இதனால் பேருந்தின் டயர்களிலிருந்து புகை கிளம்பியது.

பேருந்து ஒருவழியாக நின்றது.

பேருந்தைச் சுற்றி வளைத்த அதிகாரிகள் அனைவரும் வெளியேறும்படி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி உத்தரவிட்டனர்.

இதையடுத்து, கேடயங்களை ஏந்திக்கொண்ட சிறப்புப் படையினர் பேருந்துக்குள் விரைந்தனர்.

பேருந்துக் கடத்தலின் துவக்கத்தில் பயணி ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.