பொருளியலில் தோல்வி கண்டவர் டிரம்ப் : ஹாரிஸ் கடும் தாக்குதல்.
பொருளியலில் தோல்வி கண்டவர் டோனல்ட் டிரம்ப், செல்வந்தர்களை நண்பர்களாகக் கொண்டவர் என்று துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசும் டோனல்ட் டிரம்ப்பும் கடைசி நேர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் செப்டம்பர் 25ஆம் தேதி பொருளியல் பற்றி தனியாகப் பேட்டியளித்த கமலா ஹாரிஸ், வெளிநாட்டு இறக்குமதி மீது பெருமளவு வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதால் நடுத்தர வர்க்க அமெரிக்கர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் இருவரும் சமபலத்துடன் இருக்கின்றனர். பொருளியல் போன்ற முக்கியமான விவகாரங்களில் இன்னமும் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்யாதவர்களை ஈர்க்க அவர்கள் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கின்றனர்.
தொழில் நகரமான பிட்ஸ்பர்க்கில் உரையாற்றிய கமலா ஹாரிஸ், செல்வந்தர்களுக்கு பொருளியல் சிறப்பாக இருப்பதையே டிரம்ப் விரும்புகிறார். எளிய மக்களுக்கு அல்ல என்றார்.
டிரம்ப் அதிபராக இருந்தபோது ஏறக்குறைய 200,000 தொழிற்சாலை வேலைகள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டதை சுட்டிக்காட்டிய அவர், பொருளியலில் டிரம்ப் பெரும் தோல்விகளைச் சந்தித்தவர் என்று கூறினார்.
பின்னர் எம்எஸ்என்பிசிக்கு நேர்காணல் அளித்தபோது, வெளிநாட்டுப் பொருளுக்கு டிரம்ப் வரி விதிக்க விரும்புவதை கடுமையாக விமர்சித்தார்.
“எல்லாவற்றுக்கும் வரி விதிக்கும் டிரம்ப்பின் யோசனையை செயல்படுத்த முடியாது. அவருக்கு அதன் தீவிரம் பற்றி தெரியவில்லை,” என்றார் கமலா ஹாரிஸ்.
ஜனநாயகக் கட்சியில் ஜோ பைடனுக்குப் பதில் ஜூலையில் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக கமலா ஹாரிஸ் தனியாக நேர்காணல் அளித்துள்ளார். சென்ற ஆகஸ்ட்டில் டிம் வால்சுடன் சேர்ந்து அவர் கூட்டாக பேட்டியளித்துள்ளார்.