இலங்கை அதிபர் திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் சிங்கப்பூர் தலைவர்கள்.
இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசாநாயக்கவுக்கு சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திரு தர்மன் தனது கடிதத்தில், திரு திசாநாயக்கவின் தேர்வு, நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இலங்கை மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடாக இருந்ததைத் தெரிவித்துள்ளதாக, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு செப்டம்பர் 27ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
திரு தர்மன் தமது வாழ்த்துக் கடிதத்தில், “சிங்கப்பூரும் இலங்கையும் அணுக்கமான பொருளியல் ஒத்துழைப்பாலும் நெருங்கிய மக்கள் உறவாலும் நீண்டகால, நட்பார்ந்த உறவை அனுபவித்து வந்துள்ளன. 2025ஆம் ஆண்டில், இரு நாடுகளும் 55 ஆண்டுகால அரசதந்திர உறவை நினைவுகூரும் வேளையில், இரு தரப்புக்கும் இடையிலான உறவவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையின் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேயைத் தோற்கடித்து, திரு திசாநாயக்க செப்டம்பர் 23ஆம் தேதி அந்நாட்டின் புதிய அதிபராகப் பதவியேற்றார்.
மார்க்சிஸ்ட் சார்பு கொண்ட ஜனதா விமுக்தி பெரமுனவின் (மக்கள் விடுதலை முன்னணி) தலைவரான திசாநாயக்க, முன்னேற்றம் இல்லாத நிதி நெருக்கடியின் மீதான அதிருப்தி, ஊழல் எதிர்ப்பு, ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலான தேர்தல் பிரசாரத்தின் விளைவாக நாட்டின் உயர் பதவியைப் பெற்றார்.
செப்டம்பர் 23ஆம் தேதியிடப்பட்ட தமது வாழ்த்துக் கடிதத்தில் பிரதமர் வோங், “சிங்கப்பூரும் இலங்கையும் குறைவான கரிம வெளிப்பாடு, திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருமித்த ஆர்வங்களைக் கொண்டுள்ளன. நாம் பலதரப்பு அமைப்புகளில் நன்றாக ஒத்துழைக்கிறோம். இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கம், காமன்வெல்த் அமைப்பு ஆகியவற்றின் சக உறுப்பினர்களாக இருக்கிறோம்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
சிங்கப்பூரும் இலங்கையும் 2025ஆம் ஆண்டில் அரசதந்திர உறவுகளை நிறுவி 55 ஆண்டுகள் நிறைவடையும் என்றும் கூறிய திரு வோங், “இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் விரிவுபடுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.
70 ஆண்டுகளில் 2022 ஏப்ரலில் மிக மோசமான பொருளியல் தாக்கத்தால் நொடித்துப்போன நிலைக்குத் தளப்பட்ட இலங்கையின் ஆகக் கடைசி அதிபர் தேர்தலை செப்டம்பர் 21ஆம் தேதி நடத்தியது.
அதில் 42 விழுக்காட்டுக்குள் அதிகமான வாக்குகளைப் பெற்ற திரு திசாநாயக்க, இலங்கையில் அதிபராக பதவியேற்ற முதல் இடதுசாரி அரசியல்வாதி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.