வடக்கு,கிழக்கில் சுயேச்சையாகக் களமிறங்கவுள்ளோம்-புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி அறிவிப்பு.

எதிர் வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்குகிழக்கில் உள்ள முன்னாள் போராளிகள், சிவில் அமைப்புக்கள், ஆதரவாளர்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் ஆதரவுடன் சுயேட்சையாக வடக்கு கிழக்கில் போட்டியிட உள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர்  கே.இன்பராசா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்றைய தினம் (28.09) சனிக்கிழமை, இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அதிகூடிய சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு எமது கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.”

“எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் சுயேட்சையாக போட்டியிட உள்ளோம்.”

“தமிழ் மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.வடக்கு கிழக்கு மக்களுக்காக நாங்கள் எங்கள் உயிரையே அர்ப்பணித்தோம்.”

“அங்கவீனமாக்கப்பட்டுள்ளோம்.

அநாதரவாகத் தெருவில் நிற்கின்றோம்.எனவே முன்னாள் விடுதலைப் புலிகள் ஆகிய நாங்கள் மக்களுக்காகவே இத்தேர்தலில் களமிறங்கவுள்ளோம்.”

“தற்போதைய ஜனாதிபதி ஊழலை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதனால் மக்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். இதே போல் வடக்கு கிழக்கிலும் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளைப் புறம் தள்ளி ஒரு புதிய ஊழலற்ற அரசியலை முன்னெடுக்க நாங்கள் தயாராகவுள்ளோம்.”

“எனவே தமிழ் மக்கள் எங்களுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென கேட்டு நிற்கின்றோமென அவர் மேலும் தெரிவித்தார்.

ரோகினி நிஷாந்தன்

Leave A Reply

Your email address will not be published.