தமிழர் அபிலாஷைகளை முன்கொண்டு செல்லக் கூடியவர்களை நாடாளுமன்றத் தேர்தலில் களமிறக்க வேண்டும் தமிழ்க் கட்சிகள்! – உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் கோரிக்கை.
“வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் அபிலாஷைகளை முன்கொண்டு செல்லக் கூடியவர்களைத் தமிழ்க் கட்சிகள் களமிறக்க வேண்டும்.”
இவ்வாறு வவுனியா மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் கோரிக்கை விடுத்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்குக் கடிதம் அனுப்பிவைத்துள்ளது.
அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“இலங்கை தேசம் தற்போது மீண்டும் ஒரு தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்றது. மக்கள் தங்களுக்கான சட்டவாக்க சபைக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்ற இந்தத் தீர்க்கமான காலகட்டத்தில் அரசியல் தலைமைகளும் ஜனநாயக ரீதியானதும் காலச்சூழலுக்கு ஏற்றதுமான முடிவுகளை எட்ட வேண்டிய தருணத்தில் உள்ளார்கள்.
இந்தக் களச்சூழலில் உண்மை மற்றும் நல்லிணக்க மன்றமாகிய நாம் தமிழ் மக்கள் மத்தியில் பல தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இருந்தோம். அதன் பிரகாரம் அம் மக்களின் அபிலாஷைகளை முன்னெடுத்து செல்லும் பொருட்டு சில வெளிப்படுத்தல்களை அரசியல் தலைமைகளுக்கு வழங்குவதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் பொறுப்புடன் செயற்படத் தீர்மானித்துள்ளது.
இதன் பிரகாரம் உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் சில பரிந்துரைகளை முன்வைக்க எண்ணுகின்றது. அவையாவன, இனங்களுக்கு இடையில் குரோதங்களையோ முரண்பாடுகளையோ ஏற்படுத்தாத வகையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு உண்மைகளை வெளிப்படுத்தி யதார்த்தபூர்வமான வாக்குறுதிகளை வழங்கி இந்தத் தேர்தலில் அரசியல் தலைமைகள் தங்களுக்கான தேர்தல் தளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
இதேவேளை, தமிழர் தரப்பில் பல்வேறு நியாயப்பாடான தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. காலாகாலமாக அவர்கள் தங்களுடைய அரசியல், சமூக, சமய, கலாசார விடயங்களில் தங்களுக்கான ஒரு உறுதிப்படானதும் நிலையானதுமான தீர்வை வேண்டி நிற்கின்றனர்.
அந்தவகையில் கடந்த காலங்களைப் போல் அல்லாமல் ஒரு தீர்க்கமானதும் அர்த்த புஷ்டியானதும் தற்கால அரசியல் தளத்துக்கு ஏற்றல் போல் நகர்ந்து செல்லக்கூடிய அரசியல் தலைமைகள் உருவாக வேண்டும் என்பதோடு சட்டவாக்க சபைக்குச் செல்பவர்கள் குற்றச் செயலோடு சம்பந்தமற்றவர்களாகவும் சுயநலம் அற்றதும் ஊழல் மற்றும் அரசியலால் தனிநபர் முன்னேற்றம் போன்றவற்றைக் தவிர்த்து சமூகம்சார் அறிவுடன் அவைசார்ந்த சிந்தனையை மேலோங்கி கொண்டு செல்லக்கூடிய முற்போக்காளர்களை இந்த அரசியல் களத்தில் களம் இறக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை தமிழ் மக்கள் முன் வைத்திருக்கின்றார்கள்.
ஆகவே, தமிழர்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தின் வலிமையை நிலை நாட்டுவதற்காக தமிழர் தரப்பில் செயல்பட்டு வரும் அரசியல் கட்சிகள் ஓர் அணியில் நின்று அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் எனக் கோருவதுடன் இளம் சமூகத்தினரையும் புதியவர்களையும் களம் இறக்கி ஆரோக்கியம் உள்ள ஒரு அரசியல் தளத்தை உருவாக்க வேண்டும் என்பதோடு தமிழ் மக்களின் உணர்வுசார் விடயங்களை சகோதர சிங்கள மொழி பேசும் மக்களிடம் கொண்டு செல்லும் ஆற்றலுள்ளவர்களையும் தெரிவு செய்ய ஆவன மேற்கொள்ளுமாறும் உண்மை மற்றும் நல்லிணக்க மன்றமானது அரசியல் தலைமைகளிடம் முன்வைக்கின்றது.
தமிழர் தரப்பு அரசியல் கட்சிகள் அனைத்தும் விட்டுக்கொடுப்புகளோடும் மக்களுடைய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் சிந்தித்து ஓரணியில் செயற்படுவதற்கு ஏற்றால்போல் ஆரோக்கியமான கலந்துரையாடல்களை நடத்தி இந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்தை சந்திக்க வேண்டும் என உண்மை மற்றும் நல்லிணக்க மன்றம் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் அரசியல் தலைமைகளிடமும் கோரி நிற்கின்றது.” – என்றுள்ளது.
…………….