பொதுத் தேர்தலுக்கான ரணில் – சஜித் கூட்டணி சின்னத்தால் இழுபறி!

ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சு சாதகமாக முடிவடைவதற்குரிய சாத்தியம் காணப்படுகின்றது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்க வேண்டிய சின்னம் தொடர்பிலேயே இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை சஜித் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடப்போவதில்லை, தேசியப் பட்டியலிலும் வரப்போவதில்லை என ரணில் அறிவித்துவிட்டதால், தலைமைப் பதவியில் மாற்றம் அவசியமில்லை என ஐ.தே.க. தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அடுத்தது நாடாளுமன்றத் தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் களமிறங்கும் யோசனையை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது. அவ்வாறு செய்தால் அது தமது தரப்பு அரசியல் அடையாளத்துக்குப் பாதகம் என்பதால் பொது சின்னத்தில் களமிறங்கும் யோசனை ஐ.தே.க. தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை ஏற்பதற்கும் ஐ.தே.க. பச்சைக்கொடி காட்டியுள்ளது. எனவே, சின்னம் இறுதியானால் கூட்டணி பேச்சு வெற்றியளிக்கும் என ஐ.தே.க. உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இன்றும் பேச்சு தொடர்ந்தது. எதிர்வரும் 29 ஆம் திகதிக்குள் இறுதி முடிவொன்றை எட்டுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
………

Leave A Reply

Your email address will not be published.