தன்னைப் பற்றி மாத்திரமே சிந்திக்கும் சஜித்தால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது! – முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சாடல்.

“சஜித் பிரேமதாஸ இந்தச் சந்தர்ப்பத்தில் கூட தன்னைப் பற்றி மாத்திரமே சிந்திப்பவராகவே இருக்கின்றார். அவரால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்று நாம் நம்பவில்லை. எனவே, பொதுக் கூட்டணியின் கீழ் பொதுச் சின்னமொன்றில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குவோம்.”

இவ்வாறு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்குச் சேவையாற்றியிருக்கின்றார் என்பதை 22 இலட்சம் மக்கள் உணர்ந்துள்ளனர்.

ஏனைய 42 சதவீதமானோர் நாட்டில் மாற்றமொன்று வேண்டும் எனத் தீர்மானித்துள்ளனர். அந்த மக்கள் ஆணைக்கு நாம் மதிப்பளிக்கின்றோம்.

ஏனையோரைப் போன்று நாடு வீழ்ச்சியடையும் வரை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் நாம் அல்லர். யார் ஆட்சி செய்தாலும் நாடு அபிவிருத்தியடைய வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

ஆனால், நாடு வீழ்ச்சியடைந்தபோது சஜித் பிரேமதாஸ பொறுப்புக்களை ஏற்கவில்லை. அவ்வாறான ஒருவரால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்று நாம் நம்பவில்லை. அதற்கான பலமிக்க தலைவராகவும் நான் அவரைப் பார்க்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நாம் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் கூட்டணியமைப்பதற்கு அழைப்பு விடுத்தோம்.

ஆனால், இந்த விடயத்திலும் சஜித் பிரேமதாஸ முன்னரைப் போன்றே பழைய நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார். தன்னைப் பற்றி மாத்திரமே அவர் சிந்திக்கின்றார்.

பரந்துபட்ட ரீதியில் சிந்திக்கும் திறன் அவருக்கு இல்லையென்றால் அது கவலைக்குரிய விடயமாகும். பொதுச் சின்னத்தில் பொதுக் கூட்டணியின் கீழ் நாம் பொதுத் தேர்தலில் களமிறங்9குவோம்.” – என்றார்.
………

Leave A Reply

Your email address will not be published.