ரிஷாத் கட்சியில் இருந்து விலகுகின்றேன்! நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்!! – முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அறிவிப்பு

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும் கட்சியின் சகல உறுப்புரிமைகளில் இருந்தும் நான் விலகிக்கொள்கின்றேன். இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவுள்ளேன்.”

இவ்வாறு முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் கடந்த பத்து வருடங்களாகப் பயணித்துள்ளேன். ஒன்பது வருடங்களாக தேசிய அமைப்பாளராக இருந்து 2015இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 34 ஆயிரம் வாக்குகளைப் பெற்று திருகோணமலை மாவட்டத்தில் முதலிடத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக நான் தெரிவாகியதுடன் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் எனக்குப் பிரதி அமைச்சர் பதவியைப் பெற்றுத் தந்தார். மக்கள் பணிக்காக இதனை அர்ப்பணம் செய்து பணியாற்றினேன்.

இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் மூதூரில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஒருவரை நிறுத்தி திட்டமிட்டு தோற்கடிப்பதற்காகச் சஜித்தும் ஹக்கீமும் எனக்கு எதிராகச் செயற்பட்டார்கள். இதனை ரிஷாத்துக்கு எடுத்துக் கூறியிருந்தேன். இருந்தபோதிலும் இரண்டு வருடங்களாக திட்டமிட்டு என்னை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக வைத்தியர் ஹில்மிக்கு வேட்பாளரைத் தருவதாக கூறி சதி நடத்திவிட்டுச் சென்றுள்ளார்.

இவ்வளவு காலமாக இப்படியொரு பிரதான சூத்திரதாரி இருப்பார் என்று நினைக்கவில்லை. தற்போது அறிந்துகொண்டேன், இவர்களது சுயரூபத்தை. இருந்த போதிலும் எதிர்வரும் 11ஆம் திகதி வேட்புமனுத் தாக்கலின்போது பொதுத் தேர்தலில் களமிறங்குவேன் என்பதைத் தெரிவிக்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.