காரைதீவிலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல்.
கொரோனா அச்சத்தால்
அனலைதீவும் முடக்கம்!
காரைதீவிலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல்
என்று யாழ். மாவட்ட அரச அதிபர் அறிவிப்பு
யாழ். மாவட்டத்தின் அனலைதீவுப் பிரதேசம் மறு அறிவித்தல் வரை சுகாதாரப் பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இன்று காலை மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட அனலைதீவைச் சேர்ந்த இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்துக் கைதுசெய்யப்பட்ட நபர்கள் அனலைதீவுப் பிரதேசத்தில் நடமாடினார்கள் என்று கருதப்படுவதன் காரணமாகப் குறித்த பிரதேசம் சுகாதாரப் பிரிவினரால் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் காரைநகர் பிரதேசத்தில் நடமாடியதன் காரணமாக காரைநகர் பிரதேசத்தில் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது கொரோனாத் தொற்று ஒருவருக்கு மாத்திரமே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.
யாழ். மாவட்ட சுகாதார மேம்பாட்டுக் குழுவினுடைய தீர்மானத்தின்படி சகல பிரதேச செயலகங்களின் ஊடாகவும், கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் ஊடாகவும், அதேநேரத்தில் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி சில முற்பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை வழங்கி அவர்களை நடைமுறைப்படுத்தும்படி வேண்டியிருக்கின்றோம்.
இந்தநிலையில் தற்போது யாழ். மாவட்டம் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் இன்னும் அபாயமான ஓர் சூழ்நிலை காணப்படுகின்றது. ஆகவே, முற்பாதுகாப்பு நடவடிக்கையை அனைவரும் ஒருங்கிணைந்து எடுப்பது மிக கட்டாயமானதாகும்.
இன்றைய நிலையில் சுமார் 411 குடும்பங்களைச் சேர்ந்த 868 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாக்
கொரோனாத் தொற்றுக்கு இனங்காணப்படுபவர்களோடு சம்பந்தப்பட்டவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்குரிய நடவடிக்கையை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டுள்ளார்கள்.
எங்களைப் பொறுத்தவரைக்கும் அதிகமாக வெளியூரில் இருந்து வருகை தந்து இங்கே தொழில் புரிகின்றவர்களை இனங்கண்டு அவர்களுக்குப் பி.சி.ஆர். பரிசோதனை செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரத் திணைக்களத்தினர் மேற்கொண்டுள்ளார்கள்.
அதிகம் தொற்றுள்ள கம்பஹா மாவட்டம் மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து கடமையாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் பரிசோதனைகளை நாங்கள் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம்.
கடந்த இரண்டு வாரங்களுக்குள் வெளி மாவட்டங்களில் இருந்து யாழ். மாவட்டத்துக்கு வந்தவர்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்குரிய பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, அவ்வாறு வருகை தந்தவர்கள் சுயமாகத் தங்களுடைய பதிவுகளை வைத்திய அதிகாரி பிரிவுகளில் வழங்கவேண்டும். அதேபோல் பிரதேச செயலர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் தங்களுடைய பிரதேசங்களில் இரண்டு வாரங்களுக்குட்பட்ட பகுதியில் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தோரின் பதிவுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
இன்று தொடக்கம் அனலைதீவு பிரதேசமும், காரைநகர் பகுதியில் ஒரு பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாகச் செயற்படுவதன் மூலம் அசௌகரியங்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.
புங்குடுதீவுப் பகுதியில் கொரோனாத் தொற்றுக்குள்ளான இளம் பெண் பயணம் செய்த பஸ்ஸில் பயணித்தவர்கள் தொடர்பில் விபரங்களை கோரியிருந்தோம். சுகாதாரப் பிரிவினரால் குறித்த பஸ் இலக்கங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்றைய நிலவரப்படி சுமார் 15 பேர் மாத்திரமே தமது பதிவுகளை சுகாதாரப் பிரிவினரிடம் மேற்கொண்டுள்ளார்கள். எனவே, அவர்களும் தாமாக முன்வந்து தமது விபரங்களைச் சமர்ப்பிக்கும்போது தமது சமூகத்தையும் தங்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
கல்வித் திணைக்களத்தைப் பொறுத்தவரைக்கும் அரசினுடைய அறிவுறுத்தலின் பிரகாரம் முடக்கப்பட்ட பகுதிகளில் அல்லது முடக்கத்துக்குள்ளாக்கப்படும் எனக் கருதப்படும் பிரதேசங்களிலும் சுகாதாரப் பாதுகாப்புடன் பரீட்சைகளை நடத்துதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தரம் 5 புலமைப் பரிசில் மற்றும் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைகளைத் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களிலும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் கல்வித் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் தற்போது முடக்கப்பட்டுள்ள புங்குடுதீவு மற்றும் அனலைதீவுப் பிரதேசங்களில் திட்டமிட்டபடி குறித்த பரீட்சைகள் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன” – என்றார்.