ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் பணத்தை திருடிய பூசாரிகள் (Video)

கர்நாடகாவின் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் பணத்தை பூசாரிகள் கட்டுக் கட்டாகத் திருடும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியானதை அடுத்து அதுகுறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள காலி ஆஞ்சநேய சுவாமி கோயில் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைத் தொகையை எண்ணும்போது சிலர் கட்டுக்கட்டாகப் பணத்தைத் திருடுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.

பல்லாயிரக்கணக்கானோர் செலுத்தும் காணிக்கைப் பணம் கோயில் நலப்பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக பக்தர்கள் கருதிவந்தனர்.

காணொளி பரவியதும், பக்தர்களின் பணம் மோசடி செய்யப்படுவதாகப் பலரும் கவலை தெரிவித்தனர்.

இந்நிலையில், அக்கோயிலின் தலைமைப் பூசாரி ராமச்சந்திரா ‘பெங்களூர் மிர்ரர்’ நாளேட்டுக்கு அளித்த நேர்காணலில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

காணொளியில் இடம்பெறும் சம்பவம் ஈராண்டுகளுக்குமுன் நடந்ததாகவும் அதன் தொடர்பில் ஏற்கெனவே நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இருவர் மீதும் சமையற்காரர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ராமச்சந்திரா குறிப்பிட்டார்.

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்; சமையற்காரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.

அதன் பிறகு, இத்தகைய திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க கோயில் நிர்வாகம் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்றார் அவர்.

கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாணவர்களும் தொண்டூழியர்களும் பணம் எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

சம்பவம் முன்னர் நடந்தது என்று தலைமைப் பூசாரி விளக்கமளித்தபோதும் பக்தர்கள் பலரும் இதுகுறித்து வேதனை அடைந்துள்ளனர். கோயில் நிர்வாகம் நன்கொடைப் பணத்தைக் கையாளும் முறையின் நேர்மை குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.