டாடா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; ரூ.300 கோடி இழப்பு
கிருஷ்ணகிரி: தமிழகத்தில் ஓசூர் மாவட்டம் அருகே அமைந்துள்ள டாடா மின்னணுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக ரூ.300 கோடி மதிப்புள்ள பொருள்கள் தீக்கிரையாயின.
அந்தத் தொழிற்சாலையில் ‘ஐபோன்’ உதிரிப் பாகங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. 20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் என்றும் அவர்களில் 85 விழுக்காட்டினர் பெண்கள் என்றும் ஊடகச்செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சனிக்கிழமை அத்தொழிற்சாலையில் உள்ள வேதிப் பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அடுத்த ஓரிரு நிமிடங்களுக்குள் மளமளவென வேகமாக பரவிய தீயால் அப்பகுதியை கரும்புகை சூழ்ந்தது.
ஊழியர்கள் வேகமாக வெளியேறியபோதும், வேதிப் பொருள்களில் இருந்து உருவான புகையைச் சுவாசித்த 11 தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் 11 வாகனங்களில் விரைந்து வந்து, ஏழு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தீ விபத்து காரணமாக டாடா நிறுவனத்துக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தீ விபத்தின்போது 523 தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக டாடா நிறுவனம் கூறியுள்ளது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனரா என்பதை கண்காணிக்க சுகாதாரத்துறை சார்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு கூறியுள்ளார்.
இந்தத் தீ விபத்தால் ஏற்பட்டுள்ள மொத்த இழப்பு குறித்து டாடா நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு அனைத்து விவரங்களையும் தெரிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.